மங்களூருவில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.25¾ லட்சம் மோசடி
மங்களூருவில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.25¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு-
மங்களூருவில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.25¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நிறுவனத்தில்...
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு காவூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இணையதளத்தில் வேலை தேடி உள்ளார். அப்போது, இணையதளத்தில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தில் எச்.ஆர். பதவிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், வீட்டில் இருந்தே பணிபுரிய வாய்ப்பு அளிப்பதாகவும் விளம்பரம் இருந்தது. இதனை பார்த்த அவர், அந்த விளம்பரத்தை கிளிக் செய்து தனது சுயவிவரத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு வேலை தருவதாகவும் கூறி உள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்தே பணிபுரிய முன்பணம் செலுத்த வேண்டும் என அந்த நபர் கூறி உள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அந்த வாலிபர், பல்வேறு தவணைகளில் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.22.11 லட்சம் வரை அனுப்பி உள்ளார். ஆனால் அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அந்த வாலிபர் உணர்ந்தார்.
விமான நிறுவனம்
இதேபோல், மங்களூருவை சேர்ந்த ஒருவர் விமான நிறுவனத்தில் வேலை இருப்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், விமான நிறுவனத்தில் வேலை தருவதாகவும், அதற்காக உங்களின் வங்கி கணக்கு எண், ஆதார் எண் மற்றும் ஓ.டி.பி. ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை நம்பிய அவர், மர்மநபர் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.89 லட்சம் எடுக்கப்பட்டது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டது அந்த நபருக்கு தெரியவந்தது.
மேலும், மங்களூருவை சேர்ந்த முதியவர் ஒருவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் மெஸ்காமில் இருந்து பேசுவதாக கூறிய நபர், மின்கட்டணம் செலுத்தாமல் இருப்பதாகவும், செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் அனுப்பும் லிங்கை கிளிக் செய்து உடனடியாக அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அந்த முதியவர், அந்த லிங்கை கிளிக் செய்து தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.71 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதனால் மின்கட்டணம் செலுத்தவில்லை என கூற மர்மநபர் ரூ.71 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
ராணுவவீரர்
மற்றொரு சம்பவத்தில் மங்களூருவை சேர்ந்த ஒருவர், தனது வீட்டை வாடகைக்கு விடுவது தொடர்பாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். இதனை பார்த்து ஒருவர் போன் செய்து, தான் ராணுவவீரர் என்றும், தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வீடு வாடகைக்கான முன்பணம் செலுத்துவதற்காக வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். இதனை நம்பிய வீட்டு உரிமையாளர், தனது வங்கி கணக்கு விவரங்களை அந்த நபருக்கு தெரிவித்துள்ளார்.
அப்போது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை மர்மநபர் எடுத்து மோசடி செய்துவிட்டார். ஒட்டு மொத்தமாக 4 பேரிடம் இருந்தும் ரூ.25.71 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து 4 பேரும் தனித்தனியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.