இறந்த மகனின் சொத்தில் விதவை தாய்க்கும் சமபங்கு வழங்க வேண்டும்-ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


இறந்த மகனின் சொத்தில் விதவை தாய்க்கும் சமபங்கு வழங்க வேண்டும்-ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x

இறந்த மகனின் சொத்தில் கணவரை இழந்த தாய்க்கும் சமபங்கு வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

பெங்களூரு: இறந்த மகனின் சொத்தில் கணவரை இழந்த தாய்க்கும் சமபங்கு வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

சொத்து பிரிப்பதில் சிக்கல்

பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா ரெட்டி. இவரது மனைவி ஈரம்மா. இந்த தம்பதிக்கு பொரசா ரெட்டி, பீமா ரெட்டி, பசவ ரெட்டி, ரேவம்மா ஆகிய 4 பிள்ளைகள் இருந்தனர். இதில் பீமா ரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமந்தா ரெட்டியும் உடல் நலக்குறைவால் பலியானார். இந்த நிலையில் அனுமந்தா ரெட்டிக்கு சொந்தமான சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஈரம்மாவுக்கும் சொத்தில் பங்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது அவர்களது மகன்கள் 3 பேரும் சொத்தை தாய்க்கு கொடுக்க போவது இல்லை என கூறினர். இதுதொடர்பான வழக்கு மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. அந்த கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஈரம்மா கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஐகோர்ட்டு தீர்ப்பு

இந்த நிலையில் ஈரம்மா தொடர்ந்த வழக்கை நீதிபதி விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில், சொத்து விவகாரத்தில் பங்கீட்டின்போது மகன்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் கணவர் இல்லாத பெண் உயிருடன் இருக்கும்போது, சொத்தில் அவருக்கு பங்கு உண்டு. சொத்தை பிரிக்கும்போது மகன்களுடன் சேர்த்து விதவை தாய்க்கும் ஒரு பங்கு வழங்க வேண்டும். எனவே அனுமந்தா ரெட்டியின் சொத்தை 4 மகன்கள் குடும்பத்துடன் சேர்த்து 5-வதாக ஈரம்மாவுக்கு சமபங்கீடு செய்து கொடுக்க வேண்டும்.

மேலும், பீமா ரெட்டி இறந்த நிலையில் அவரது சொத்து அவரது மனைவி, மகள் மற்றும் உயிருடன் இருக்கும் விதவை தாய்க்கும் வழங்கப்பட வேண்டும். எனவே இந்த வழக்கில் அனுமந்தா ரெட்டியின் சொத்தை 5 பங்குகளாக பிரித்து அதில் 1 பங்கு ஈரம்மாவுக்கும், மறைந்த மகன் பீமாவின் சொத்து பங்கில் சம பங்கும் வழங்க வேண்டும். இந்த உத்தரவு இதேபோல் கணவரை இழந்து உயிருடன் இருக்கும் விதவை பெண்ணுக்கும், மகன் மற்றும் கணவரை இழந்து வாழும் பெண்ணுக்கும் இது பொருந்தும் என பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.


Next Story