பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துகொண்டார்.
பெங்களூரு: பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் பின்பக்க நுழைவு வாயில் பகுதிக்கு நேற்று காலையில் ஒரு நபர் வந்தார். அவர் திடீரென்று தன்னிடம் இருந்த விஷத்தை எடுத்து குடித்தாா். இதன்காரணமாக அவர் அங்கு மயக்கம் போட்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்கள், அந்த நபரை மீட்டு பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதுபற்றி அறிந்ததும் விதானசவுதா போலீசார், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும், பவுரிங் ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த சித்தராமேகவுடா என்பதும், தொழிலாளி என்றும் தெரிந்தது.
சித்தராமேகவுடாவின் மகள், பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி மருமகன் மீது அம்ருதஹள்ளி போலீசில் புகார் அளித்திருத்திருந்ததாகவும், ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சித்தராமேகவுடா குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த வழக்கில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடா்பாக விதானசவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.