கர்நாடகத்தில், தனியார் பங்களிப்புடன் 1,000 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்

கர்நாடகத்தில், தனியார் பங்களிப்புடன் 1,000 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படுகிறது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் எரிபொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுகிறது. பெங்களூருவில் 148 இடங்களில் சுமார் 334 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைப்பது குறித்து பெங்களூரு மின்வினியோக நிறுவனம் கூறியதாவது:-
பெங்களூரு நகரில் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. பெஸ்காம் சார்பில் கர்நாடகத்தில் 1,000 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பெங்களூருவில் மட்டும் 164 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் நெடுஞ்சாலைகளில் 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மின்சார சார்ஜிங் மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் மையங்கள் தனியார் மற்றும் அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
இவ்வாறு பெஸ்காம் கூறியுள்ளது.