கர்நாடகத்தில் 2½ லட்சம் ஏக்கர் தரிசு நிலம் சீரமைக்கப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் 2½ லட்சம் ஏக்கர் தரிசு நிலம் சீரமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் 2½ லட்சம் ஏக்கர் தரிசு நிலம் சீரமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
மண் பாதுகாப்பு
ஈஷா பவுண்டேசன் சார்பில் மண் பாதுகாப்போம் இயக்கத்தின் தொடக்க விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தில் காடுகள் பரப்பு 24 சதவீதமாக உள்ளது. இது 30 சதவீதமாக உயர்த்தப்படும். மண்ணின் தன்மையை பாதுகாக்க மாதம் 4 நாட்கள் அதாவது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விவசாயிகளிடம் சென்று மண் பாதுகாப்பு குறித்து எடுத்து கூற வேண்டும். நமது வாழ்க்கையின் நோக்கம் என்ன என்ற கேள்வி மனிதர்களிடம் இருக்க வேண்டும்.
'பூ சேதனா' திட்டம்
மண்ணில் ஒரு விதையை விதைத்தால் அது பல மடங்கு விதைகளை நமக்கு தருகிறது. மண்ணின் தரத்தை பரிசோதித்து அவற்றின் தரத்தை உயர்த்துவதே 'பூ சேதனா' அதாவது நில சீரமைப்பு திட்டம் ஆகும். பசுமை சுற்றுச்சூழல் திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 2½ லட்சம் ஏக்கர் தரிசு நிலம் சீரமைக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், "21-வது நூற்றாண்டு கவலை அளிப்பதாக உள்ளது. நம்மை காக்கும் இயற்கை நமக்கு எதிராக உள்ளதா? என்று நினைக்க தோன்றுகிறது. நாகரிகம் எவ்வளவு வளர்ந்தாலும் நாம் உயிர் வாழ தேவைப்படும் சுத்தமான காற்று, சுத்தமான நீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றார். இந்த நிகழ்ச்சியில் ஈஷா பவுண்டேசன் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.