குடகில் புலி, காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்
குடகில் தொடர் அட்டகாசம் செய்து வரும் புலி, காட்டுயானைகளை பிடிக்கக்கோரி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடகு-
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா ஆர்.ஜி கிராமத்தில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று பசுமாட்டை தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல பொன்னம்பேட்டை பகுதியிலும் புலி மற்றும் காட்டுயானைகள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் கிராம மக்களால் சுதந்திரமாக நடமாட முடியாமல் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புலி மற்றும் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி பாலிபெட்டாவை சேர்ந்த முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சுப்பிரமணி மற்றும் பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
அதாவது குடகு மாவட்டம் பாலிபெட்டா, சிந்தாபுரா, மால்தாரே, விராஜ்பேட்டை பகுதிகளில் உள்ள காபி தோட்டத்திற்கு அடிக்கடி காட்டுயானைகள் வந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் வனப்பகுதியில் இருந்து வரும் புலிகள் கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிவிட்டு செல்கின்றன. இந்த வனவிலங்குகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.