பெலகாவியில் கடந்த 2 ஆண்டுகளில் பா.ஜனதாவின் 3 முக்கிய தலைவர்கள் உயிர் இழப்பு


பெலகாவியில் கடந்த 2 ஆண்டுகளில்  பா.ஜனதாவின் 3 முக்கிய தலைவர்கள் உயிர் இழப்பு
x

பெலகாவியில் கடந்த 2 ஆணடுகளில் பா.ஜனதாவின் 3 முக்கிய தலைவர்கள் உயிர் இழப்பால் கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த 2 ஆணடுகளில் பா.ஜனதாவின் 3 முக்கிய தலைவர்கள் உயிர் இழப்பால் கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெலகாவியில் பா.ஜனதா பலம்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா திட்டமிட்டு வருகிறது. இதற்காக கட்சியை பலப்படுத்தும் விதமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மக்கள் சங்கல்பா யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

வடகர்நாடக மாவட்டங்களில் பா.ஜனதா பலம் வாய்ந்ததாக உள்ளது. அதே நேரத்தில் பெலகாவியிலும் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் உயிர் இழந்திருப்பது பா.ஜனதாவுக்கு பெரும் இழப்பை கொடுத்துள்ளது.

3 முக்கிய தலைவர்கள் உயிர் இழப்பு

அதாவது மத்திய மந்திரியாக இருந்த சுரேஷ்அங்கடி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்திருந்தார். கடந்த மாதம் (செப்டம்பர்) பெலகாவியின் முக்கிய தலைவராக இருந்து வந்தவரும், மந்திரியுமான உமேஷ் கட்டி மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு துணை சபாநாயகரான ஆனந்த் மாமணி உயிர் இழந்திருந்தார். கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெலகாவியில் 3 முக்கிய தலைவர்கள் உயிர் இழந்திருப்பது பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஆனந்த் மாமணி மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். பின்னர் அவர் துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டார். உமேஷ் கட்டி முதல்-மந்திரி பதவி கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தவர் ஆவார். இவர்களுக்கு நிகராக மாற்று தலைவர்களை தேட வேண்டிய நிலை பா.ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது.


Next Story