மங்களூருவில் போதைப்பொருளை கடத்திய 3 பேர் கைது


மங்களூருவில் போதைப்பொருளை கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2022 12:30 AM IST (Updated: 4 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில், போதைப்பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மங்களூரு;

போலீசார் சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே தாளப்பாடி-தேவிபூர் சாலை வழியாக காரில் போதைபொருட்கள் கடத்தி செல்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் மத்திய குற்றப்பரிவு போலீசார் தாளப்பாடி-தேவிபூர் சாலை தச்சனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரை குற்றப்பரிவு போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் அந்த காரில் இருந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உல்லால் தாலுகா தர்கா ரோடு பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அர்பான் என்ற ஜல்தி அர்பான் (வயது 24), மங்களூரு தாலுகா போளூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல் (42) மற்றும் மங்களூரு போலியாா் கிராமத்தை சேர்ந்த முகமது மன்சூர் (29) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கேரளாவில் இருந்து மங்களூரு நகருக்கு சட்டவிரோதமாக போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததை ஒப்புகொண்டனர். அவர்கள் தேரலகட்டே, முடிப்பு, நெட்டிலபடவு, தாளப்பாடி, உல்லாலால், மங்களூரு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்தும் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

ரூ.7 லட்சம் மதிப்பு

இதில் அப்துல் ரஹ்மான் அர்பன் மீது மங்களூரு, உல்லால் மற்றும் மங்களூரு தெற்கு போலீஸ் நிலையத்தில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அப்துல் ஜலீல் மீது கடந்த 1999-ம் ஆண்டு விட்டலா போலீஸ் நிலையத்தில் கொள்ளை வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. முகமது மன்சூர் மீது கோனஜே மற்றும் மங்களூரு தெற்கு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர்களிடமிருந்து 32 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள், 4 செல்போன்கள், ரூ.22 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும். கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story