மங்களூருவில் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் மணமகன் திடீர் மாயம் பெண் வீட்டார் அதிர்ச்சி


மங்களூருவில் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில்  மணமகன் திடீர் மாயம் பெண் வீட்டார் அதிர்ச்சி
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் திருமணத்திற்கு முந்தைய நாளில் மணமகன் திடீரென மாயம் ஆனதால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மங்களூரு-

மங்களூருவில் திருமணத்திற்கு முந்தைய நாளில் மணமகன் திடீரென மாயம் ஆனதால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தொழிலதிபர்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள தகடுகோலி-வர்காடி தேவேந்திரபடப்பு பகுதியை சேர்ந்தவர் ஐதப்பா ஷெட்டி. தொழிலதிபர். இவரது மகன் கிஷன் ஷெட்டி. இவருக்கு அவரது பெற்றோர் உப்பளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் பேசி நிச்சயம் செய்து வைத்திருந்தனர்.அவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களின் திருமணம் மங்களூருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடக்க இருந்தது. இதற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கினர். திருமணத்தையொட்டி இருவீட்டிலும் உறவினர்கள் குவிந்திருந்தனர். மணமகன் வீட்டிலும் உற்சாகம் களை கட்டியது.

மணமகன் மாயம்

நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணமகனும், அவரது நண்பர்களும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தனர். இரவு 9 மணியளவில் மணமகன் வீட்டை விட்டு வெளியே சென்றார். குளிர்பானம் வாங்கி விட்டு சிறிது நேரத்தில் வந்து விடுவேன் என்று கூறி விட்டு நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார். கடைக்கு சென்ற மணமகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கடை வீதிக்கு சென்று பார்த்தனர். மணமகனின் நண்பர்களையும் தொடர்பு கொண்டு கேட்டனர்.

எங்கு தேடியும் மணமகனை காணவில்லை. உறவினர்கள் பலரும் திரண்டு இருந்ததால் உற்சாகத்தில் மிதந்த மணமகன் வீடு, சிறிது நேரத்தில் களை இழந்தது. வீட்டில் இருந்தவர்கள் மணமகனை தேடி நாலாபுறமும் சென்றனர். யாருடைய கண்ணிலும் மணமகன் சிக்கவில்லை. இதுகுறித்து மணமகனின் பெற்றோர் கோனஜே போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மாயமான மணமகனை தேட தொடங்கினர்.

பெண் வீட்டார் அதிர்ச்சி

மணமகன் தொழிலதிபர் மகன் என்பதால் யாரும் அவரை கடத்திச் சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மணமகன் மாயமான தகவல் உப்பளம் பகுதியில் உள்ள மணமகள் வீட்டாருக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் மாயமாகி விட்ட தகவல் அறிந்ததும், மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். காலை திருமணத்திற்கு வருவோருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதனால் மணமகள் வீடும், மங்களூருவில் திருமணம் நடக்க இருந்த மண்டபமும் களை இழந்து காணப்பட்டது.


Next Story