மங்களூருவில் 6 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சம் மோசடி


மங்களூருவில் 6 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் 6 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மங்களூரு-

மங்களூருவில் 6 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பணம் மோசடி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலம் கத்ரினா ராபர்ட் என்ற பெண் அறிமுகமாகினார். இருவரும் முகநூல் மூலமாக நண்பர்களாகினர். பின்னர் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு பேச தொடங்கினர். அப்போது கத்ரினா தன்னை டாக்டர் என்று அந்த நபரிடம் கூறினார். இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இந்தியா வருவதாக கூறினார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட நபருக்கு மங்களூரு விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக செல்போன் அழைப்பு வந்தது.

அப்போது மற்றொரு பெண் ஒருவர் பேசினார். அவர் சம்பந்தப்பட்ட நபரிடம், உங்கள் தோழி கத்ரினா விமான நிலையத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் எடுத்து வந்த பொருட்களுக்கு ரூ.4.50 லட்சம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த பணத்தை செலுத்தவில்லை என்றால் அவரை, மீண்டும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவோம் என்று கூறினார். இதை சம்பந்தப்பட்ட நபர் நம்பி ரூ.4.50 லட்சத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினார்.

இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி

இதையடுத்து கத்ரினாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நபர் உடனே இது குறித்து மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா விளம்பர தூதராக இருந்த செயலின் மூலம், மர்ம நபர்கள் சிலர் பலரிடம் அதிகளவு பணம் வசூல் செய்தனர். இந்த பணத்திற்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வாலிபர் ஒருவர், இந்த செயலியில் ரூ.10¼ லட்சம் வரை பணம் முதலீடு செய்தார்.

ஆனால் அந்த பணத்திற்கு எந்த வட்டியும் வரவில்லை. மேலும் செலுத்திய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் இது குறித்து மங்களூரு நகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டதாக அப்பாஸ், உசேன், வைபவ், கோவிந்த், சாவந்த், லோகேஷ், கிஷோர், ஜாதவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் 4 பேரிடம் மோசடி

இதேபோல வங்கி மேலாளர் போன்று நடித்து ஒருவரிடம் ரூ.2.24 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். இது தவிர மற்றொரு வழக்கில் வாலிபரிடம் டெலிகிராம் செயலி மூலம் ரூ.1.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றி கிரிடிட் கார்டு ஓ.டி.பி எண் மூலம் ரூ.2.47 லட்சம் பறித்துள்ளனர்.

பின்னர் பட்டதாரி ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.96 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். இவ்வாறு 6 பேரிடம் ஆன்லைன் மூலமாக ரூ.25 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தெரியவந்தது. இந்த 6 பேர் கொடுத்த புகாரின் பேரில் மங்களூரு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story