நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; ஒரு சீட்டுக்கு ரூ.20 லட்சம் வசூல்..! சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்
டெல்லி, அரியானா மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக தகவல் கிடைத்தது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று முன் தினம் நடந்தது.
டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக, இதுவரை மோசடி ஆசாமிகள் 8 பேர் கைதாகியுள்ளனர். அவர்களிடம் நடத்திவரும் விசாரணையில், பீகார், உத்தரபிரதேசம், மராட்டியம் மற்றும் அரியானாவில் இந்த மோசடி கும்பல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்" திரைப்படத்தில் காட்டப்பட்டது போல் செயல்பட்டது.
ஒவ்வொரு மருத்துவ மாணவர் சீட்டுக்கும் ரூ.20 லட்சம் செலவாகும் என அடிப்படை விலை நிர்ணயித்து மாபெரும் நெட்வொர்க் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மாணவர்களிடம் இருந்து பெறப்படும் அந்த தொகையில் ரூ.5 லட்சம் நீட் தேர்வை அம்மாணவருக்கு பதிலாக போய் எழுதுபவருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ளவை இடைத்தரகர்கள் மற்றும் பிறரால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
இத்தகைய மோசடியை தடுக்க, நீட் தேர்வுக்கான பாதுகாப்பு சோதனைகளை அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனர்.
ஆனாலும், இந்த மோசடி கும்பலானது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி நீட் அடையாள அட்டைகளை மாற்றியமைத்து எளிதாக தேர்வு அறைக்குள் நுழைகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், விண்ணப்பதாரர்களின் பயனர் ஐ.டி.கள் மற்றும் கடவுச்சொற்களை சேகரித்து, அவர்கள் விரும்பும் அவர்களுக்கு வசதியான தேர்வு மையங்களைப் பெற்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் 11 பேர் பெயரிடப்பட்டு மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சில பயிற்சி நிறுவனங்களின் பங்கும் அடங்கும் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.