முல்பாகலில் ரூ.7 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு- 10 பேர் கைது
முல்பாகலில் ரூ.7 கோடி ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்ட போலீசார் 10 பேரை கைது செய்தனர்.
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா தாரேனஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் மற்றும் தனியார் நிலங்களை ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் பட்டா தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவராஜிக்கு புகார் வந்தது.
இதையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முல்பாகல் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து முல்பாகல் போலீசார் வருவாய் துறை அதிகாரிகளுடன் சென்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது முல்பாகலில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான 8.38 ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட முகேஷ் சபீர், கிருஷ்ணா ரெட்டி, ரமேஷ் ரெட்டி, சலீம், முரளிகிருஷ்ணா, மஞ்சுநாத், சீனிவாஸ் ரெட்டி, சிவக்குமார், வெங்கடேசப்பா, நாராயணப்பா, வி.மஞ்சுநாத் ஆகிய 10 பேரை கைது செய்தனர். மேலும் ஆக்கிரமிப்பு நிலமும் மீட்கப்பட்டது. கைதான 10 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.