மைசூரு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளை கைப்பற்றியது
மைசூரு-
மைசூரு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளை கைப்பற்றியது. வருணாவில் போட்டியிட்ட சித்தராமையா அமோக வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வெற்றி
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்தது. இதையொட்டி நேற்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது. இந்தநிலையில் மைசூரு மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளன.
அதன்படி 11 தொகுதிகளில் வெற்றி அடைந்தவர்களின் விவரங்கள்:-
வருணா தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மந்திரி வி.சோமண்ணா களம் கண்டார். நட்சத்திர தொகுதியான வருணாவில் யார் வெற்றி பெருவார்கள் என நேற்று காலை முதலே கர்நாடக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.
சித்தராமையா அமோக வெற்றி
வாக்கு எண்ணிக்கை முடிவில் சித்தராமையா 1,19,430 வாக்குகள் பெற்றார். சோமண்ணா 73,424 வாக்குகளும், ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் பாரதி சங்கர் 1,037 வாக்குகள் மட்டுமே பெற்றனர். இதில் பாரதி சங்கர் டெபாசிட் இழந்தார். இதன் மூலம் சித்தராமையா 46,006 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். சாமராஜா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹரிஷ் கவுடா 72,519 வாக்குகளை பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏ.யுமான எல்.நாகேந்திராவை தோற்கடித்தார். நாகேந்திரா 68,418 வாக்குகள் பெற்று 2-ம் இடமும், ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் எச்.கே.ரமேஷ் 4,971 வாக்குகளுடன் 3-ம் இடத்தில் உள்ளனர். கிருஷ்ணராஜா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீ வத்ஷா 73,021 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,யுமான எம்.கே. சோமசேகர் 65,969 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நரசிம்ம ராஜா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் தன்வீர் சேட் வெற்றி பெற்று உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சந்தோஷ் சுவாமி தோல்வி அடைந்தார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடா, காங்கிரஸ் வேட்பாளர் சித்தே கவுடாவை தோற்கடித்து உள்ளார்.
காங்கிரசுக்கு ஆதரவு
உன்சூர் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் ஜி.டி. ஹரிஷ் கவுடா 94,185 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான எச்.பி. மஞ்சுநாத் 91,782 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். எச்.டி.கோட்டை தொகுதியில் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனில் சிக்கமாது 83,983 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். பிரிய பட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.வெங்கடேஷ் 85,289 வாக்குகளும், கே.ஆர். நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவிசங்கர் வெற்றி பெற்று உள்ளனர்.
டி.நரசிப்புரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி எச்.சி. மகாதேவப்பா 77,494 வாக்குகளை பெற்று, தற்போதைய எம்.எல்.ஏ. ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் அஸ்வின்குமாரை தோற்கடித்து உள்ளார். அங்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் ரேவண்ணா 3-வது இடம் பெற்றார். நஞ்சன்கூடு தொகுதியில் தர்ஷன் துருவ நாராயண் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி, காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.