மைசூருவில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது
மைசூருவில் நடந்த ரவுடி கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மைசூரு-
மைசூருவில் நடந்த ரவுடி கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரவுடி கொலை
மைசூரு மாவட்டம் ஒண்டிகொப்பல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 43). இவர் மீது வி.வி.புரம் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சந்திரசேகரின் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. இவர் அந்தப்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி ஓட்டலுக்கு சாப்பிட வந்த மர்மகும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வி.வி.புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். அவர்கள் மர்மநபர்களை தேடி வந்தனர்.
7 பேர் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் வி.வி.புரம் போலீசார் ரவுடி கொலை வழக்கில் மைசூரு டவுன் படுவாரஅள்ளி பகுதியை சேர்ந்த யஸ்வந்த், பிரசாந்த், அரவிந்தசாகர், ராகவேந்திரா, சுதீப், மகேஷ், பிரீத்தம் ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உன்சூரில் நடந்த கொலையில் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை கொலை செய்ய பல ஆண்டுகளாக இவர்கள் திட்டம் திட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.