நஞ்சன்கூடுவில் பெண் மர்மசாவு வழக்கில் கணவர்-மாமனார் கைது
நஞ்சன் கூடுவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் கணவன் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு:
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா உல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரேமசந்திரா. இவரது மனைவி மமதா(20). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மமதாவின் பெற்றோர் பிரேமசந்திரா குடும்பத்திற்கு 30 கிராம் தங்கம், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து இருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக மமதாவிடம், அவரது கணவர் பிரேமசந்திரா மற்றும் மாமனார்-மாமியார் உள்ளிட்டோர்
கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறியுள்ளனர். இதற்கு மமதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மமதாவை, அவர்கள் வரதட்சணை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதில் மமதா மனமுடைந்துள்ளார். இந்தநிலையில் கவுரி பண்டிகையன்று வீட்டில் மமதா தூக்கில் பிணமாக தொங்கியநிலையில் கிடந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து மமதாவின் பெற்றோர், உல்லாஹள்ளி போலீசில் தனது மகளை, அவளது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமைப்படுத்து கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டு சென்றுவிட்டதாகவும், நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்தவர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் போலீசார் பிரேமசந்திரா, அவரது தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.