என்.ஆர்.புராவில் கைத்தவறி துப்பாக்கி சுட்டதில் குண்டு பாய்ந்து புதுமாப்பிள்ளை சாவு


என்.ஆர்.புராவில் கைத்தவறி துப்பாக்கி சுட்டதில் குண்டு பாய்ந்து புதுமாப்பிள்ளை சாவு
x
தினத்தந்தி 28 Sept 2022 12:30 AM IST (Updated: 28 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.புராவில் கைத்தவறி துப்பாக்கி சுட்டதில் குண்டு பாய்ந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா அங்கலமனே கிராமத்தை சேர்ந்தவர் விக்ராந்த் டிசோசா. இவரது மகளுக்கும், ஜான்சன் பெரேரா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், ஜான்சன் தனது மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமனாரின் காபி தோட்டத்துக்கு ஜான்சன் புறப்பட்டார். அப்போது அவர் நாட்டு துப்பாக்கியை கொண்டு சென்றதாக தெரிகிறது. அந்த சமயத்தில், எதிர்பாராதவிதமாக அவரது கைத்தவறி துப்பாக்கி சுட்டதாக தெரிகிறது.

இதில், துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டு, ஜான்சன் கழுத்தில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் என்.ஆர்.புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் ஜான்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story