உப்பள்ளியில் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
உப்பள்ளியில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா வித்யா நகர் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதனால் மேலும் சந்தேகமடைந்்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிவமொக்கா மாவட்டம் தலேகட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆசீப்(வயது 29) மற்றும் ஜெய்லானி(32) என்பதும், இவர்கள் ஹாவேரி, கதக் மற்றும் உப்பள்ளி பகுதிகளில் வாகன நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களையும், இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களையும் திருடி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.