உப்பள்ளியில் ஸ்கூட்டர் மீது கார் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் சாவு
உப்பள்ளியில் ஸ்கூட்டர் மீது கார் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த கேஷ்வாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 63). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இவர் உப்பள்ளியில் இருந்து கதக்கிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். உப்பள்ளியை அடுத்த கதக் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் சாலையில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கேஷ்வாப்பூர் போலீசார் சென்று விசாரித்தனர். அந்த விசாரணையில் பாலசுப்பிரமணியன் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வேலையின் காரணமாக உப்பள்ளியில் உள்ள கேஷ்வாப்பூர் பகுதியில் தங்கியிருந்துள்ளார். இன்னும் சில நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தது. இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.