உப்பள்ளியில் என்ஜினீயரிடம் ரூ.2¾ லட்சம் நூதன மோசடி
உப்பள்ளியில் என்ஜினீயரிடம் ரூ.2¾ லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
உப்பள்ளி-
உப்பள்ளியில் என்ஜினீயரிடம் ரூ.2¾ லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
என்ஜினீயர்
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் ராஜாஜிநகரில் வசித்து வருபவர் என்ஜினீயர் அசோக்குமார். இவர் சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை விற்பனை செய்தும் வருகிறார். நேற்று முன்தினம் இவரை செல்போன் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தனக்கு ரூ.3 லட்சத்திற்கு சிமெண்டு மூட்டைகள் தேவைப்படுவதாக கூறினார்.
மேலும் அதற்கான பணத்தை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். அதை நம்பிய அசோக்குமார், உடனே தனது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார். அதை அந்த மர்ம நபரும் பெற்றுக் கொண்டார்.
ரூ.2.70 லட்சம் அபேஸ்
சிறிது நேரத்தில் அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் ரூ.2.70 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், உடனே தான் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது தன்னிடம் பேசிய மர்ம நபர், நூதன முறையில் தன்னை ஏமாற்றி வங்கி கணக்கு விவரங்களை பெற்று ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.70 லட்சம் அபேஸ் செய்தது அசோக்குமாருக்கு தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி அசோக்குமார் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.