சிவமொக்கா மாவட்டத்தில் ஆட்டோக்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
சிவமொக்கா மாவட்டத்தில் ஆட்டோக்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்ட சிறப்பு போலீஸ் படை அரங்கில் ஆட்டோ டிரைவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமாா் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது;-
ஆட்டோ கட்டணம் விரைவில் நிர்ணயம் செய்யப்படும். அவ்வாறு கட்டணம் நிர்ணயித்த பிறகு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்ததும் அனைவரும் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த வேண்டும்.
நிர்ணயித்த கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. பொதுமக்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். மீட்டர் பொருத்தியதும் மீட்டரில் காண்பிக்கும் பணத்தைவிட கூடுதலாக யாரிடமும் வசூல் செய்ய கூடாது. டிரைவர் குறித்த அனைத்து தகவல்களும் ஆட்டோவில் பொருத்தி இருக்க வேண்டும். சாலையில் குறிப்பிட்ட இடத்தை விட்டு ஆங்காங்கே நின்று கொண்டு பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.