சிவமொக்காவில் கூட்டுறவு வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


சிவமொக்காவில் கூட்டுறவு வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் கூட்டுறவு வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிவமொக்கா-

சிவமொக்காவில் கூட்டுறவு வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கூட்டுறவு வங்கி

சிவமொக்கா நகரில் தனியார் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு சிவமொக்காவை சேர்ந்த அனில் (வயது 52) என்பவர், சிறுசேமிப்பு பிரிவில் பணம் வசூல் செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவரது அறை கதவு நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அனில், மின்விசிறியில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிவமொக்கா புறநகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

தற்கொலை

பின்னர் போலீசார், தூக்கில் பிணமாக கிடந்த அனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும், அனிலின் தலையில் கட்டி ஒன்று இருந்தது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால், பக்கவாத நோய் வந்துவிடுமோ என்று அவர் பீதியில் இருந்து வந்தார். இதன்காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மேலும் அவர் கைப்பட எழுதிய கடிதமும் போலீசாரிடம் சிக்கி இருந்தது. அதில் எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று அனில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்துகொண்ட அனில், சிவமொக்கா மாநகராட்சி பா.ஜனதா தலைவராக இருக்கும் ஞானேஸ்வரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story