தரிகெரே தாலுகாவில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது
தரிகெரே தாலுகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு-
தரிகெரே தாலுகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளை
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கடிஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜ். அவர் பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நாகராஜ் முன்னாள் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். இந்தநிலையில் நாகராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் கத்தி, அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வீட்டில் நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் நாகராஜை சரமாரியாக தாக்கி துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்து ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளை அடித்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து நாகராஜ் தரிகெரே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், போலீசாருடன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
5 பேர் கைது
அதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்திருந்த தடயங்களை கைப்பற்றினர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் பிடிக்கவில்லை.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக பத்ராவதி மற்றும் தரிகெரே பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை அடித்த தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.