2024 தேர்தலில் 50 இடங்களிலேயே பா.ஜ.க. வெற்றி பெறும்... எப்படி? என கூறும் நிதிஷ் குமார்


2024 தேர்தலில் 50 இடங்களிலேயே பா.ஜ.க. வெற்றி பெறும்... எப்படி? என கூறும் நிதிஷ் குமார்
x

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 50 இடங்களிலேயே வெற்றி பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறியுள்ளார்.



புதுடெல்லி,



ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் மணிப்பூரில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டு, பணபலத்தினால் எம்.எல்.ஏ.க்களை இழுத்து கொள்கிறது என ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் லல்லன் சிங் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது குற்றச்சாட்டாக கூறினார்.

பிரதமருக்கு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதே ஊழல்தான். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும். 2023-ம் ஆண்டில் தேசிய கட்சியாக நாங்கள் உருவெடுப்போம் என்றும் கூறினார்.

லல்லன் கூறும்போது, அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில் பா.ஜ.க.வை வீழ்த்தி ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

எங்களை தடுத்து நிறுத்த எவ்வளவு போராடினாலும் கவலையில்லை. 2023-ம் ஆண்டில் நாங்கள் தேசிய கட்சியாக உருவெடுப்போம் என அவர் கூறியுள்ளார்.

இந்த சூழலில், நிதிஷ் குமார் வரும் 5-ந்தேதி டெல்லி செல்கிறார். இந்த டெல்லி பயணத்தின் போது ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ் குமார் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு நிதிஷ் குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற மேலவை எம்.பி. மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான சுஷில் குமார் மோடி இன்று கூறும்போது, லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம், பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியை உடைக்கும். ஐக்கிய ஜனதா தள கட்சியிடம் இருந்து, அருணாசல பிரதேசம் மற்றும் மணிப்பூர் விடுபட்டு விட்டது. பீகாரில் மட்டுமே அக்கட்சி உள்ளது என கூறியுள்ளார்.

தேசிய கட்சியாக மாறும் நோக்கம் அவர்களிடம் இருந்தது. முன்பு 3 மாநிலங்களில் அவர்கள் இருந்தனர். தற்போது, பீகாரில் மட்டுமே ஆட்சியில் உள்ளனர். அதனால், அவர்களால் தேசிய கட்சியாக முடியாது என கூறியுள்ளார். நிதிஷ் குமார் தனது வாழ்வில் ஒரு போதும் பிரதமராக முடியாது. அவரால் பிரதமர் வேட்பாளராக கூட முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இன்று கூறும்போது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 50 இடங்களிலேயே வெற்றி பெறும். எப்படியெனில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்காக நான் பணியாற்றி வருகிறேன் என கூறியுள்ளார்.

பீகாரின் பாட்னா நகரில் சமீபத்தில் நடந்த ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதற்காக நிதிஷ் குமார் பணியாற்றுவதற்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் பா.ஜ.க. ஆட்சியின் கீழ் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரகாலம் நீடிக்கிறது என்ற இரு தீர்மானங்கள் நிறைவேறின.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், ஒரு சில நாட்களில் டெல்லிக்கு சென்று பா.ஜ.க. அல்லாத முன்னணி அமைப்பதற்காக, பிற கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறேன் என கூறினார். ஆனால், அதன் விவரங்களை அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், அவரது டெல்லி பயணம் மற்றும் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவது மற்றும் அவரது கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் திட்டம், பிரதமர் வேட்பாளர் திட்டம் ஆகியவை பற்றி அறிய பிற கட்சிகள் ஆவலுடன் உள்ளன.


Next Story