விவசாய பூமியான மண்டியா மாவட்டத்தில்


விவசாய பூமியான மண்டியா மாவட்டத்தில்
x

வெற்றி வாகை சூடப்போவது யார்?

காவிரி டெல்டாவில் அமைந்துள்ள விவசாய பூமி, மண்டியா மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்களும், கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் கார்டன் ஆகிய பகுதிகளும் உள்ளன. மண்டியா மாவட்டத்தில் மலவள்ளி, மத்தூர், மேல்கோட்டை, மண்டியா, நாகமங்களா, கே.ஆர்.பேட்டை, ஸ்ரீரங்கப்பட்டணா ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் 7 தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றது.

விவசாயிகளின் செல்வாக்கை பெற்ற மாநில கட்சியான ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கோட்டை என மண்டியா மாவட்டத்தை அக்கட்சியினர் கூறுகிறார்கள். இந்த தேர்தலில் மண்டியா மாவட்டத்தை கைப்பற்ற பா.ஜனதா கட்சி வியூகங்களை வகுத்துள்ளன. அதன்படி காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா எம்.பி.யை தனது பக்கம் பா.ஜனதா இழுத்து வைத்துள்ளது. அதே வேளையில் காங்கிரசும் மண்டியா மாவட்டத்தில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க பம்பரமாக சுழன்று வருகிறது.

மலவள்ளி-மத்தூர்

மலவள்ளி தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அன்னதாணி. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவருக்கு மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் பி.எம்.நரேந்திரசுவாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் அன்னதாணியிடம் தோல்வி அடைந்தார். ஆனாலும் மீண்டும் காங்கிரஸ் அவரை களம் இறக்கி உள்ளது. பா.ஜனதா வலுவான வேட்பாளரை நிறுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டி.சி.தம்மண்ணா. ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த இவரையே மீண்டும் வேட்பாளராக அக்கட்சி நிறுத்தியுள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

மேல்கோட்டை-மண்டியா

பிரசித்தி பெற்ற செலுவநாராயண சாமி குடிக்கொண்டிருக்கும் மேல்கோட்டை தொகுதியில் கடந்த முறை ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சி.எஸ்.புட்டராஜூ போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரையே ஜனதாதளம் (எஸ்) கட்சி மீண்டும் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் இங்கு வலுவான வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன.

மண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் சீனிவாஸ் போட்டியிட்டு ெவற்றி பெற்றார். அவரையே ஜனதாதளம்(எஸ்) கட்சி மீண்டும் நிறுத்தி உள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்யவில்லை.

நாகமங்களா-கே.ஆர்.பேட்டை

நாகமங்களா தொகுதியில் கடந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றிவாகை சூடியிருந்தது. அக்கட்சியை சேர்ந்த சுரேஷ்கவுடா எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவேர இந்த முறையும் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். கடந்த தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த செலுவராயசாமி, மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் செல்வாக்கு இல்லாத பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுடன் மல்லுக்கட்டும் வகையில் வேட்பாளரை தேடி வருகிறது.

கே.ஆர்.பேட்டை தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நாராயணகவுடா. கடந்த 2018-ம் ஆண்டு ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். இதையடுத்து 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவர் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அவர் பா.ஜனதா சார்பில் களம் இறங்கலாம் என தெரிகிறது. ஜனதா தளம்(எஸ்) சார்பில் எச்.டி.மஞ்சுநாத் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் கே.பி.சந்திரசேகர் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீரங்கப்பட்டணா

ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரவீந்திரா ஸ்ரீகண்டய்யா. ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த இவர் இந்த முறையும் ஜனதாதளம்(எஸ்) சார்பில் அவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் பண்டிசித்தேகவுடா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதாவும் இங்கு வலுவான வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகிறது.

எது எப்படியோ இந்த மாவட்டத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியை வீழ்த்த தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜனதாவும் வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகின்றன. அது கை கொடுக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.


Next Story