மைனர் பெண்ணை தாயாக்கிய வழக்கில் துணிக்கடை உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மைனர் பெண்ணை தாயாக்கிய வழக்கில் துணிக்கடை உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
மங்களூரு;
மைனர் பெண் பலாத்காரம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கந்தாவர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(வயது 42). இவர், கைகம்பா பகுதியில் சொந்தமாக துணிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் கடந்த 2017-ம் ஆண்டு மைனர் பெண் ஒருவர் ஊழியராக வேலை செய்து வந்தார்.
அப்போது ஒருநாள் சிறுமி தலைவலி இருப்பதாக கூறியுள்ளார். அப்போது அப்துல் லத்தீப், மைனர் பெண்ணுக்கு பழச்சாறு வாங்கி கொடுத்துள்ளார். மேலும் தலைவலி மாத்திரை ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மாத்திரையை மைனர் பெண்ணும் போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு ஒரு அறைக்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார். அப்போது சிறிதுநேரத்தில் மைனர் பெண் மயக்க நிலைக்கு சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அப்துல் லத்தீப், மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து சுயநினைவுக்கு திரும்பிய மைனர் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தார்.
அப்போது தான் அவருக்கு, அப்துல் லத்தீப் மயக்க மருந்து கலந்துகொடுத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அப்துல் லத்தீப், மைனர் பெண்ணிடம் வீடியோவை காண்பித்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
கைது
இதனால் நாளடைவில் மைனர் பெண் கர்ப்பமானார். இதுபற்றி மைனர் பெண் தரப்பில் பஜ்பே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் லத்தீப்பை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.
இதற்கிடையே மைனர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. மரபணு பரிசோதனையில் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் லத்தீப் குழந்தையின் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது.
10 ஆண்டுகள் சிறை தண்டனை
இதுதொடர்பான வழக்கு மங்களூரு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ராதாகிருஷ்ணா மைனர் பெண்ணை கற்பழித்து தாயாக்கியது நிரூபணமானதால் அப்துல் லத்தீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
மேலும் இதில் அப்துல் லத்தீப்புக்கு கடையில் ஊழியராக பணியாற்றிய கீதா என்பவர் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அவருக்கு எதிராக ஆதாரம் இல்லாததால் கீதா விடுவிக்கப்பட்டார்.