நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில்5 பேருக்கு ஆயுள் தண்டனை
நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மங்களூரு-
நிதி நிறுவன அதிபர்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கோனஜே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பள்ளியப்பா. இவர் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி பள்ளியப்பா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அடுத்த 2 நாட்கள் கழித்து அவர் அலிகிருபதா பகுதியில் உள்ள ஒரு மலையில் வைத்து பிணமாக மீட்கப்பட்டார். அவரை மர்ம நபர்கள் பயங்கரமாக தாக்கி கத்தியால் குத்தி படுகொலை செய்து உடலை அங்கு வீசியிருந்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
இதுபற்றி கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதலில் துப்பு கிடைக்காமல் இருந்தது. பின்னர் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது பள்ளியப்பாவிடம், அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஹம்சா(வயது 47) என்பவர் ரூ.72 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அவர் அந்த கடனை திரும்ப செலுத்தவில்லை.
இதனால் ஹம்சாவிடம், பள்ளியப்பா தொடர்ந்து பணத்தை கேட்டு வந்தார். இதையடுத்து சம்பவத்தன்று பள்ளியப்பாவை ஹம்சா, தனது கூட்டாளிகளான அசாருதீன் என்கிற அசார்(29), சஜிபநாடு கிராமத்தைச் சேர்ந்த அமீர் என்கிற அம்மி(29), முகமது அப்ராஸ்(23), அதாவுல்லா என்கிற அல்தாப்(23) ஆகியோருடன் சேர்ந்து ஆட்டோவில் கடத்தி சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி கொன்று உடலை அலிகிருபதா மலையில் வீசியிருந்தது தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
இதையடுத்து போலீசார் ஹம்சா மற்றும் அவரது கூட்டாளிகள் அசாருதீன், அமீர், முகமது அப்ராஸ், அதாவுல்லா ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது மங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நேற்று முன்தினம் இறுதி விசாரணை நடந்தது. பின்னர் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
அதில் வழக்கில் குற்றவாளிகளான ஹம்சா, அசாருதீன், அமீர், முகமது அப்ராஸ், அதாவுல்லா ஆகிய 5 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பி.பி.ஜகாதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பள்ளியப்பாவின் மகளுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் சட்ட சேவை ஆணையத்துக்கு நீதிபதி பரிந்துரைத்தார். இதையடுத்து ஹம்சா உள்பட 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.