தேவாலயத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
தேவாலயத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு: பெங்களூருவில் தேவாலயத்திற்குள் புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை கைது செய்தனர். அவர் மேலும் சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
பெண்ணை கற்பழிக்க முயற்சி
பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் (செப்டம்பர்) கிறிஸ்துவ தேவாலயத்திற்கு அந்த பெண் சென்றிருந்தார். அப்போது தேவாலயத்தின் வளாகத்தில் வைத்து அந்த பெண்ணை ஒரு நபர் கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்துவிடுவதாக மர்மநபர் மிரட்டினார்.
மேலும் அந்த பெண்ணை மர்மநபர் கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதனால் அந்த பெண்ணை தாக்கிவிட்டு மர்மநபர் தப்பி ஓடினார். அந்த சந்தர்ப்பத்தில் பெண்ணின் கணவர் ஓடிவந்து மர்மநபரை பிடிக்க முயன்றார். அப்போது அப்பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்ததால் பெண்ணின் கணவரிடம் சிக்காமல் மர்மநபர் ஓடிவிட்டார்.
வாலிபர் கைது
இதுகுறித்து அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவந்தனர். இந்த நிலையில், பெண்ணை கற்பழிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரது பெயர் வில்லியம் பிரகாஷ் என்று தெரிந்தது. தேவாலயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்றதுடன், அவரை தாக்கியதும் தெரியவந்தது.
இந்த பெண் தவிர மேலும் சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அவர்களை வில்லியம் பிரகாஷ் கற்பழிக்க முயன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து கைதான வில்லியம் பிரகாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாஸ் கவுடா தெரிவித்துள்ளார்.