மக்களவையில், விவாதம் இன்றி ரூ.45 லட்சம் கோடி செலவுக்கான மானிய கோரிக்கைகள் நிறைவேற்றம்


மக்களவையில், விவாதம் இன்றி ரூ.45 லட்சம் கோடி செலவுக்கான மானிய கோரிக்கைகள் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 24 March 2023 5:15 AM IST (Updated: 24 March 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

மக்களவையில், எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையே விவாதம் இன்றி, ரூ.45 லட்சம் கோடி செலவழிப்பதற்கான மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன், புரட்சியாளர்கள் பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் நினைவு நாளையொட்டி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சமீபத்தில் மறைந்த 4 முன்னாள் எம்.பி.க்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தியை பேச அனுமதி அளிக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் 10 நிமிடங்களுக்கு கூச்சல்-குழப்பம் நிலவியது.

கேள்வி நேரத்துக்கு பிறகு பேச அனுமதி அளிப்பதாகவும், சபையை நடத்த விடுமாறும் சபாநாயகர் ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார். அதை ஏற்காமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர்.

இதையடுத்து, பிற்பகல் 2 மணிவரை சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

2 மணிக்கு சபை கூடியபோது, அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பதாகைகளையும் காண்பித்தனர்.

சபாநாயகர் இருக்கை அருகே திரண்டனர். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த ராஜேந்திர அகர்வால், இந்த அமளிக்கிடையே சபையை மாலை 6 மணிவரை ஒத்திவைத்தார்.

அதன்படி, மாலை 6 மணிக்கு சபை மீண்டும் கூடியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மானிய கோரிக்கைகளையும், அவற்றுக்கு நிதி ஒதுக்குவதற்கான மசோதாவையும் விவாதம் மற்றும் ஓட்டெடுப்புக்காக தாக்கல் செய்தார்.

ஆனால், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், சபாநாயகர், தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அனைத்து அமைச்சகங்களின் மானிய கோரிக்கைகளையும் விவாதமின்றி ஓட்டெடுப்புக்கு விட்டார்.

மானிய கோரிக்கைகள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறின. அவற்றின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. இதன்மூலம், 2023-2024 நிதி ஆண்டில் மொத்தம் ரூ.45 லட்சம் கோடி செலவழிப்பதற்கான மானிய கோரிக்கைகளுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.

அதைத்தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை கூடியவுடன், சபை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அதானி விவகாரத்தை விவாதிக்கக்கோரி 267-வது பிரிவின்கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 நோட்டீஸ்கள் அளித்திருந்தனர். அவற்றை சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார்.

அதையடுத்து, அதானி பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகளும், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியும் கோஷமிடத் தொடங்கின. இதைத்தொடர்ந்து, பிற்பகல் 2 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தை தொடருமாறு பிஜு ஜனதாதள எம்.பி. சுஜீத் குமாரை சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் கேட்டுக்கொண்டார்.

ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மாறிமாறி கோஷம் எழுப்பினர். துணைத்தலைவர் அமைதியாக இருக்குமாறு கூறியும் ஏற்கவில்லை. இதனால், அவர் சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story