போலீஸ்காரர் கொலையில் மகன்கள் உள்பட 5 பேர் கைது


போலீஸ்காரர் கொலையில் மகன்கள் உள்பட 5 பேர் கைது
x

உப்பள்ளியில் போலீஸ்காரர் கொலையில் மகன்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து பிரச்சினையில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

உப்பள்ளி;

போலீஸ்காரர்

கதக் மாவட்டம் கனவிஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷாப்(வயது 54). இவர் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு பக்ருஷாப் (30), தாவுத் முன்னி (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2-வது மனைவிக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற இஸ்மாயில் ஷாப் திடீரென்று மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

கழுத்தை இறுக்கி கொலை

இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி, உப்பள்ளி அருேக சுத்திகட்டி பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அருகே இஸ்மாயில் ஷாப் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நவநகர் ஏ.பி.எம்.சி. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இஸ்மாயில் ஷாப் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள், அவரது கழுத்தை இறுக்கி கொன்று உடலை வீசி சென்றது தெரியவந்தது.

சொத்து பிரச்சினை

இதையடுத்து நவநகர் ஏ.பி.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், இஸ்மாயில் ஷாப்பின் மகன்கள் பக்ருஷாப், தாவுத் முன்னியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால் அவர்களை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது சொத்து பிரச்சினையில் அவர்கள் தான் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து இஸ்மாயில் ஷாபை கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.

அதாவது, இஸ்மாயில் ஷாப் தனது 2-வது மனைவியுடன் நெருக்கமாக இருந்தார். இதனால் அவரது முதல் மனைவியின் மகன்கள் தங்களது பெயருக்கு சொத்தை எழுதி வைக்கும்படி பலமுறை கேட்டுள்ளனர். இதற்கு இஸ்மாயில் ஷாப் மறுத்துள்ளார். இதனால் பக்ருசாப்பும், தாவுத் முன்னியும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து இஸ்மாயில் ஷாபை கொலை செய்தனர்.

5 பேர் கைது

இதையடுத்து போலீசார் பக்ருஷாப், தாவுத் முன்னி மற்றும் அவரது நண்பர்கள் தர்ஷன் அரிகட்டி, சிவு, ஈஸ்வர் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான 5 பேரிடமும் நவநகர் ஏ.பி.எம்.சி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story