உடுப்பியில் ஆட்டோ மீது மரம் விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி


உடுப்பியில் ஆட்டோ மீது மரம் விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில் ஆட்டோ மீது மரம் சாய்ந்து விழுந்து பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

மங்களூரு-

உடுப்பி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில் ஆட்டோ மீது மரம் சாய்ந்து விழுந்து பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

உடுப்பி மாவட்டத்தில் மழை

உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறைக்காற்றுடனும், இடி-மின்னலுடனும் மழை பெய்து வருகிறது. அதுபோல் நேற்று முன்தினம் இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடனும், சூறைக்காற்றுடனும் பலத்த மழை கொட்டியது.

இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. மேலும் பல இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. மின்கம்பங்களும் முறிந்தன. இதனால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

உடல் நசுங்கி பலி

பலத்த மழையின்போது காபு அருகே சிருவா கிராமத்திற்கு உட்பட்ட மஜூர் பகுதியில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா(வயது 45), அவரது கொழுந்தன் கிருஷ்ணா(48) ஆகியோர் பயணித்து வந்தனர். ஆட்டோவை டிரைவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு ராட்சத மரம் சாய்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது.

இதில் ஆட்டோவில் பயணித்து வந்த புஷ்பா, அவரது கொழுந்தனார் கிருஷ்ணா ஆகியோர் உடல் நசுங்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஆட்டோ டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பேரிடர் மீட்பு குழுவினர்...

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிருவா போலீசார் விரைந்து வந்து புஷ்பா மற்றும் அவரது கொழுந்தன் கிருஷ்ணா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்து கிடக்கின்றன. அவற்றை சீரமைக்கும் பணியில் மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story