பெங்களூரு உள்பட நகர்ப்புறங்களில் 438 'நம்ம கிளினிக்' திட்டம் தொடக்கம்-மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்


பெங்களூரு உள்பட நகர்ப்புறங்களில் 438 நம்ம கிளினிக் திட்டம் தொடக்கம்-மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
x

பெங்களூரு உள்பட நகர்ப்புறங்களில் 438 ‘நம்ம கிளினிக்’ திட்டம் தொடங்கவும், இதற்காக முதற்கட்டமாக ரூ.103¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு உள்பட நகர்ப்புறங்களில் 438 'நம்ம கிளினிக்' திட்டம் தொடங்கவும், இதற்காக முதற்கட்டமாக ரூ.103¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மந்திரிசபை கூட்டம்

கர்நாடகத்தில் மாதந்தோறும் மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசின் முக்கிய திட்டங்களுக்கும், கொள்கை முடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 243 வார்டுகளிலும், மாநிலம் முழுவதும் நகர்ப்புறங்களில் 195 இடங்களிலும் 'நம்ம கிளினிக்' எனும் மருத்துவ கிளினிக் திட்டம் தொடங்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நம்ம கிளினிக்கில் காய்ச்சல் உள்ளிட்ட சிறிய நோய்கள், சிறிய பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட இருக்கிறது.மக்களுக்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு நம்ம கிளினிக் என்ற முறையில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் அரசு அறிவித்து இருந்தது. அதன்படி மந்திரி சபை கூட்டத்தில், இந்த திட்டம் தொடங்குவது பற்றி மந்திரிகளுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

நம்ம கிளினிக் திட்டம்

அப்போது நம்ம கிளினிக் திட்டத்தை பெங்களூருவில் உடனடியாக தொடங்குவதற்கு அனுமதி அளித்தும், இதற்காக ரூ.103¾ கோடியை ஒதுக்குவது என்றும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மந்திரிசபை கூட்டம் முடிந்ததும், அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

438 இடங்களில்...

கா்நாடக பட்ஜெட்டில் நம்ம கிளினிக் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். அதன்படி, கர்நாடகத்தில் 438 நம்ம கிளினிக் தொடங்குவதற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.103.73 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நம்ம கிளினிக்கில் பணியாற்றுவதற்காக மாநிலம் முழுவதும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

438 கிளினிக்குகளுக்கும் 438 டாக்டர்கள், அதற்கு நிகராக நர்சுகள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நம்ம கிளினிக்கில் மற்ற அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும் இருக்கும். சாதாரண காய்ச்சலில் இருந்து பிற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். நகர்ப்புறங்கள், பெங்களூரு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இந்த நம்ம கிளினிக் தொடங்கப்பட உள்ளது.

ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நம்ம கிளினிக் தொடங்குவதற்கு ரூ.36.45 லட்சம் ஆகும் என்று கணக்கீடப்பட்டுள்ளது. இதுமற்ற பகுதிகளில் ரூ.34.46 லட்சம் செலவாகும் என்று மதிப்பீடப்பட்டுள்ளது. இந்த நம்ம கிளினிக்கில் பணியாற்றுபவா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

கர்நாடக பட்ஜெட்டில் அறிவித்தப்படி நம்ம கிளினிக் திட்டம் மாநிலம் முழுவதும் கூடிய விரைவில் செயல்பட உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவும் மந்திரிசபை கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அனுமதி வழங்கி உள்ளார்.

தங்கச்சுரங்க வளர்ச்சிக்கு நிதிஒதுக்கீடு

ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தங்கச்சுரங்கத்தில் வளர்ச்சிக்காக ரூ.307 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவமொக்காவில் விமான நிலையம் அமைக்க ரூ.384 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. விமான நிலையத்தில் கூடுதல் வசதிகளை மேற்கொள்ள ரூ.65 கோடியை ஒதுக்கவும் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.


Next Story