விவசாயிகளிடம் இருந்து வாங்கும் பாலுக்கான ஊக்கத் தொகையை குறைக்க கூடாது; அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
1 ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், விவசாயிகளிடம் இருந்து வாங்கும் பாலுக்கான ஊக்கத்தொகையை குறைக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
1 ரூபாய் 50 காசு குறைப்பு
கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கர்நாடகத்தில் பால் உற்பத்தி அதிகரித்த காரணத்தால், விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் பாலுக்காக, அவர்களுக்கு வழங்கும் ஊக்கத் தொகையை 1 ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டு இருந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
அதாவது கோடை காலத்தில் பால் உற்பத்தி குறைந்ததால், கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகளுக்கு 2 ரூபாய் 85 காசு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மழை தொடங்கி இருப்பதால், பால் உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையில் 1 ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டு இருந்தது.
குறைக்க கூடாது என உத்தரவு
இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையாவின் கவனத்திற்கும் வந்தது. அரசு சார்பில் ஊக்கத்தொகை குறைக்கப்படாத பட்சத்தில் கர்நாடக பால் கூட்டமைப்பின் இயக்குனர் தான் குறைத்திருந்தார். இதையடுத்து, அரசின் கவனத்திற்கு வராமல் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பாலுக்காக வழங்கப்படும் ஊக்கத் தொகையை குறைக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுபோன்ற முடிவுகள் எடுக்கும் போது கண்டிப்பாக அரசுடன் ஆலோசிக்க வேண்டும், அரசின் கவனத்திற்கு முதலில் கொண்டு வர வேண்டும், அதன்பிறகு தான் ஊக்க தொகையை குறைப்பது குறித்து முடிவு எடுக்க வேணடும் என்று அதிகாரிகளை முதல்-மந்திரி சித்தராமையா கடிந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.