காதல் திருமணம் செய்த பெண் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து தப்பி ஓடிய மாமனாருக்கு போலீஸ் வலைவீச்சு


காதல் திருமணம் செய்த பெண் உள்பட  3 பேருக்கு கத்திக்குத்து தப்பி ஓடிய மாமனாருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அந்த பெண் உள்பட 3 பேரை பெண்ணின் மாமனார் கத்தியால் குத்தினார். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

சிவமொக்கா-

காதல் திருமணம் செய்த கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அந்த பெண் உள்பட 3 பேரை பெண்ணின் மாமனார் கத்தியால் குத்தினார். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

காதல் திருமணம்

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் அஸ்வத் நகரில் வசித்து வந்தவர் மணிகண்டா. காபித்தோட்ட தொழிலாளி. இவருக்கும், அனுஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து, இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை மணிகண்டாவின் நண்பர் ஒருவர் முன்னின்று நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பின்னர் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அனுஷா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி வந்தார். சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து அனுஷா தனது கணவனிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டார். இதுபற்றி அவர் தனக்கு திருமணம் செய்து வைத்த மணிகண்டாவின் நண்பரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே அவர் மணிகண்டாவையும், அனுஷாவின் தங்கை ஜான்வியையும் செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வரும்படி அழைத்தார். மேலும் பஸ் நிலையத்திற்கு சென்று அனுஷாவையும் தடுத்து நிறுத்தினார்.

அப்போது மணிகண்டா தனது தந்தை குமாருடன் வந்தார். அதுபோல் அனுஷாவின் தங்கை ஜான்வியும் அங்கு வந்தார். பின்னர் அவர்கள் அசோக்நகர் கால்வாய் கரையோரம் அமைந்துள்ள சவுடம்மா கோவிலுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

கத்திக்குத்து

அப்போது அனுஷாவையும், அவரது கணவர் மணிகண்டாவையும் சேர்த்து வைக்க மணிகண்டாவின் நண்பர் போராடினார். ஆனால் அவரது பேச்சை மணிகண்டாவும், அவரது தந்தை குமாரும் கேட்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் மணிகண்டாவின் தந்தை குமார், இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் தனது மகனின் நண்பன் தான் என்று கருதினார். உடனே அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.

அதை தடுக்க வந்த அனுஷா மற்றும் அவரது சகோதரி ஜான்வி ஆகியோரையும் குமார் கத்தியால் சரமாரியாக குத்தினார். அதையடுத்து மணிகண்டாவும், அவரது தந்தையும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தீவிர சிகிச்சை

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அனுஷா உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு மெக்கான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வினோபா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டாவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மணிகண்டாவின் தந்தை குமாரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story