கொரோனாவுக்கு பிறகு உறுப்பு மாற்று ஆபரேஷன் அதிகரிப்பு; மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்
கொரோனா காலத்துக்கு பிறகு உறுப்பு மாற்று ஆபரேஷன்கள் அதிகரித்து இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி எஸ்.பி.சிங் பாகல் தெரிவித்தார்.
உறுப்பு மாற்று ஆபரேஷன்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகல் கூறியதாவது:-
கொரோனா காலத்துக்கு பிறகு, நாட்டில் உறுப்பு மாற்று ஆபரேஷன்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு, 16 ஆயிரத்து 41 உறுப்பு மாற்று ஆபரேஷன்கள் நடந்தன. இது, முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் அதிகம். அதுபோல், இந்த ஆண்டு இதுவரை 7 ஆயிரத்து 107 உறுப்பு மாற்று ஆபரேஷன்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ ஆலோசனை
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-
மத்திய சுகாதார அமைச்சகம், தொலைபேசி வழியாக நோயாளிகளுக்கு டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கும் 'இ-சஞ்சீவானி' திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி தொடங்கியது. இந்த திட்டத்தில், இதுவரை 14 கோடியே 17 லட்சம் தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை கைதிகள்
மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஸ்ரா கூறியதாவது:-
தேசிய குற்ற ஆவண காப்பகம், சிறைகுறித்த புள்ளிவிவர அறிக்கை ஒன்றை 2021-ம் ஆண்டு வெளியிட்டது. 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நிலவரப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 165 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் நிலைய மரணங்கள்
மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான 5 ஆண்டுகளில், நாடு முழுவதும் போலீஸ் நிலையங்களில் 687 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக, குஜராத் மாநிலத்தில் 81 பேரும், மராட்டிய மாநிலத்தில் 80 பேரும் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் 36 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ''கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரில் ஊடுருவல் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஒரு ஊடுருவல் கூட நடக்கவில்லை'' என்று கூறினார்.
கடன் பாக்கி
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கரத் கூறியதாவது:-
கடந்த 5 நிதி ஆண்டுகளில், ரூ.10 லட்சத்து 57 ஆயிரத்து 326 கோடி வாராக்கடன்களை வர்த்தக வங்கிகள் தள்ளி வைத்துள்ளன. வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களில் முதல் 50 இடங்களில் இருப்பவர்கள் மொத்தம் ரூ.87 ஆயிரத்து 295 கோடி கடன் பாக்கி வைத்துள்ளனர். அதிகபட்சமாக, நகை வியாபாரி மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.8 ஆயிரத்து 738 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.