கர்ப்பப்பை வாய் புற்றுநோய் - உள்நாட்டு தடுப்பூசி அறிமுகம் செய்து வைத்தார் ஜிதேந்திர சிங்
முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஜிதேந்திர சிங், இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்தார்.
புதுடெல்லி,
பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் போது கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் செப்டம்பர் 2018-ம் ஆண்டில் இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய தடுப்பூசி மூலம் கர்ப்பபை புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும். சீரம் நிறுவனம் கண்டுபிடித்த செர்வாவேக் தடுப்பூசியை டெல்லியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
இளம் வயதுப் பெண்களிடையே பரவலாகக் காணப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியை இந்தியா வெளியிட்டுள்ளது. பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நாம் இப்போது தடுப்பு சுகாதாரத்தை தேட முடியும். இந்த தடுப்பூசி மலிவு விலையில் கிடைக்கும் என்றார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் மருத்துவமனைகளில் கிடைக்கும். அதை முதலில் நம் நாட்டிற்கும் பின்னர் உலகிற்கும் கொடுப்போம். 200-400 வரை விலை இருக்கலாம் ஆனால் விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 2 ஆண்டுகளில் 200 மில்லியன் டோஸ் தயாரிக்க உள்ளோம் என சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ, ஆதார் பூனாவல்லா கூறினார்.