நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 27 டன் நிவாரண பொருட்கள் இந்தியா அனுப்பியது
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் கடந்த 22-ந் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் கடந்த 22-ந் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த பேரிடரில் 1,150-க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது.
அந்த வகையில் 2 விமானங்களில் 27 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது. கூடாரங்கள், போர்வைகள், பாய்கள் மற்றும் உணவு பொருட்கள் என அத்தியாவசிய பொருட்கள் இதில் அடங்கியுள்ளன. இவை அங்குள்ள ஐ.நா. ஒருங்கிணைப்பு அலுவலகம் மற்றும் ஆப்கன் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை வெளியிட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுடன் இந்தியா இருக்கும் எனவும், நிவாரண உதவிகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது.