தொற்று பரவல் தொடர்ந்து வேகம் எடுக்கிறது: 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 6,050 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நம் நாட்டில் புதிய வகை கொரோனாவான 'எக்ஸ்பி.பி.1.16' தாக்கம் அதிகரிப்பதால், தொற்று பரவல் தொடர்ந்து வேகம் எடுத்து வருகிறது.
நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக்கடந்து 4 ஆயிரத்து 435 என பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்தைத்தாண்டியது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரம், 5 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று ஒரு படி மேலே சென்று 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது .
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 9 ஆயிரத்து 422 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்தனர். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.