சர்வதேச தொலைத்தொடர்பு கூட்டமைப்பு கவுன்சில் பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும் - மத்திய அரசு


சர்வதேச தொலைத்தொடர்பு கூட்டமைப்பு கவுன்சில் பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும் - மத்திய அரசு
x

இந்த பொறுப்புக்கு இந்தியாவின் வேட்பாளராக எம்.ரேவதி போட்டியிடுவார்.

புதுடெல்லி,

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் தகவல் சங்கத்தின் உலகளாவிய மாநாடு - 2022ல் மே 31 முதல் ஜுன் 3 வரை நடைபெற்றது.

சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு(ஐடியு), ஐ.நா.கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு(யுனெஸ்கோ), ஐ.நா.வளர்ச்சித் திட்டம் (யுஎன்டிபி), வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா.மாநாடு ஆகியவை இணைந்து, தகவல் சங்கத்தின் உலகளாவிய மாநாடுக்கு கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

இதில், மத்திய தொலைத்தொடர்புத் துறை இணை மந்திரி தேவுசிங் சவுகான் தலைமையிலான இந்திய தூதுக்குழு பங்கேற்றது. இந்த மாநாட்டில் பேசிய மத்திய மந்திரி தேவுசிங் சவுகான் கூறியதாவது,

"2023-26 காலகட்டத்திற்கான, 'சர்வதேச தொலைத்தொடர்பு கவுன்சிலின்(ஐடியு) வானொலி ஒழுங்குமுறை வாரிய உறுப்பினர்' பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும். இந்த பொறுப்புக்கு இந்தியாவின் வேட்பாளராக எம்.ரேவதி போட்டியிடுவார்.

1869-ம் ஆண்டிலிருந்தே இந்த கவுன்சிலில் உறுப்பினராக உள்ள இந்தியா, இந்த அமைப்பில் தீவிரமாக பணியாற்றி வருவதுடன், அமைப்பின் வளர்ச்சிக்கும் தீவிர பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் பாரத்நெட் திட்டத்தின்கீழ் அதிவேக இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன், கிராமப்புறங்களிலும் 5-ஜி அலைவரிசை பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story