புத்தாக்கத்தில் இந்தியா முன்னணி நாடுகளின் வரிசையில் இடம் பெறும்; ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சு


புத்தாக்கத்தில் இந்தியா முன்னணி நாடுகளின் வரிசையில் இடம் பெறும்; ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சு
x

புத்தாக்கத்தில் இந்தியா முன்னணி நாடுகளின் வரிசையில் இடம்பெறும் என்று ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

பெங்களூரு:

விமான கண்காட்சி

14-வது சர்வதேச பெங்களூரு விமான கண்காட்சி கடந்த 13-ந் தேதி பெங்களூருவில் தொடங்கியது. பிரதமர் மோடி கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியையொட்டி பல்வேறு தலைப்புகளில் மாநாடுகள் நடைபெறுகின்றன. அதில் ஒன்றாக 'ராணுவ புத்தாக்க ஆண்டு மாநாடு' நடைபெற்றது. இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் ராணுவ மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டை ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாம் முன்னேற வேண்டுமெனில் போட்டியின் நோக்கங்களை மாற்றி முறைப்படுத்த வேண்டும். புதிய வழியில் சிந்தித்து அதன்படி பயணிக்க வேண்டும். நமது கலாசாரத்துடன் ஏதாவது புதிய விஷயங்களை செய்ய வேண்டும்.

புத்தாக்க தொழில்கள்

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்னவென்றால், யு.பி.ஐ. அடிப்படையிலான ஆன்லைன் பண பரிமாற்ற முறை ஆகும். நாம் புத்தாக்க விஷயங்களை கண்டறிய வேண்டும். புத்தாக்கம் என்னவெனில் புதிய வழியில் சிந்திப்பது. இதனை உங்களை போன்ற இளைஞர்கள் சிறப்பாக செய்ய முடியும்.

நாம் பிற நாடுகளை தாண்டி செல்ல வேண்டுமெனில் புதிய நபர்கள், புத்தாக்க தொழில்கள் (ஸ்டார்ட்அப்) தொடங்க முன்வர வேண்டும். எனது பார்வையில் புத்தாக்க தொழில் என்றால், புதிய சக்தி, புதிய அர்ப்பணிப்பு, புதிய ஆர்வம் ஆகும்.

எதிர்காலத்தை வடிவமைப்போம்

75 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் பாதையில் பயணிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று முதல் நமது மந்திரம், எதிர்காலத்தை வடிவமைப்போம் என்பதாக இருக்க வேண்டும். நமது வடிவமைப்பு என்பது, அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதன்மையான பொருளாதார பலமிக்க நாடாக வர வேண்டும்.

அறிவியல்-தொழில்நுட்பத்தில் நாம் பெரும் சக்தியாக வர வேண்டும். இதற்கு 'அமிரித் காலம்' என்பது சரியான நேரம் ஆகும். நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பவர்கள், வளர்ச்சி ஏற்படுத்துகிறவர்கள் இளைஞர்கள். கடந்த சில ஆண்டுகளில் புத்தாக்க தொழிலுக்கான சிறந்த சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ஆர்வம்

நாட்டில் தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தாக்க தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நமது நாட்டின் இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்ட 'யுனிகார்ன்' (ஒன்றின் தொழில் மதிப்பு ரூ.8,000 கோடி) தொழில் நிறுவனங்களை நிறுவியுள்ளனர். இது புத்தொழில் நிறுவனங்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை மட்டுமின்றி இளைஞர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாக்கத்தை புகுத்துவதில் முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியாவும் விரைவில் இடம் பெறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. கடந்த காலத்தை போல் வரும் காலத்திலும் உலக நாடுகளுக்கு இந்தியா கலங்கரை விளக்கமாக திகழும்.

ராணுவ தளவாடங்கள்

'ஐடெக்ஸ்' மற்றும் சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகளை எளிமையாக்கியுள்ளோம். ஐடெக்ஸ் நிறுவனம், ராணுவத்தின் தேவையில் தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.


Next Story