சீன எல்லையில் மைனஸ் 40 டிகிரி குளிரில் உள்ள இந்திய வீரர்கள் குடிநீரை பெற ஏராளமான குளங்களை உருவாக்கிய பொறியாளர்கள்!
இந்திய வீரர்கள் சுத்தமான குடிநீரை பெற ராணுவ பொறியாளர்கள் குழு ஏராளமான குளங்களை உருவாக்கி வருகிறது.
லடாக்,
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானத்திற்கு பதிலடியாக, கிழக்கு லடாக் பிரிவில் இந்தியா உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
லடாக்கில் கடந்த 2020 மே மாதம் மோதலில் ஈடுபட்ட பின்னர், எல்லையில் இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கிழக்கு லடாக்கில் சீன ஆக்கிரமிப்பை சமாளிக்க இந்தியா 50,000 க்கும் மேற்பட்ட படைகளை நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன் அதிக எண்ணிக்கையிலான புதிய உபகரணங்களையும் நிறுத்தியுள்ளது.
ராணுவ வீரர்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்காக, இந்திய ராணுவம் ஏராளமான குளங்களை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் கடும் பனிக் காலத்திலும் குடிநீரைப் பெற முடியும். இது குறித்து இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறியாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் கூறியதாவது:-
ராணுவ வீரர்கள் இந்த ஆண்டு உறைபனி குளிர்காலங்களில் கூட இந்த குளங்களில் இருந்து சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தினர். கடுமையான குளிர்காலத்தில் மேற்பரப்பு மட்டத்தில் உள்ள நீர் உறைந்துவிடும் ஆனால் கீழே, அது திரவ வடிவில் உள்ளது.நமது படையினர் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த குளங்களின் நீரை பயன்படுத்தினர்.
லடாக்கின் மிகவும் குளிரான இடங்களில் தவுலத் பெக் ஓல்டி(டிபிஓ) ஒன்றாகும்.இது குளிர்ந்த பாலைவனப் பகுதி. இந்த பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரிக்கு கீழே செல்கிறது. அப்போது படையினருக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவது சவாலாக உள்ளது.
இதனை சமாளித்து ராணுவ வீரர்கள் பயன்பெறும் அகையில், நமது பொறியாளர்கள் குழு விரிவான பணிகளை செய்துள்ளது என்றார்.
முன்னதாக, லடாக் எல்லையில் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குறுகிய கால அளவில் தேவையான கட்டுமானங்களை மேற்கொள்ள முடிகிறது. இதன்மூலம், 100 மீட்டர் தொலைவிலிருந்து டி-90 பீரங்கியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும், இந்த கட்டுமானங்கள் தாங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 22,000 துருப்புகள் பயன்படுத்தும் வகையில் நவீன தங்குமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.அதேபோல் ராட்சத ஆயுத சேமிப்பு கிடங்கும் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 450 டாங்குகள், கவச ஆயுதங்கள், துப்பாக்கிகளை சேமித்து வைக்க முடியும்.
சர்ச்சைக்குரிய பாங்காங் த்சோ ஏரியில் சீனா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள, கிழக்கு லடாக்கில் புதிய தரையிறங்கும் தளங்களை இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் நிலைநிறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக இந்தியாவின் எல்லை ரோந்து திறன் அதிகரித்துள்ளது. இதனுடன் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவப் பொருட்களை எளிதாக எல்லைக்கு கொண்டு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.