இந்திய ராணுவத்தின் பதிலடியில் சீனப்படை ஓட்டம்: 'உயிர்சேதம் எதுவும் இல்லை' ராஜ்நாத்சிங் விளக்கம்


இந்திய ராணுவத்தின் பதிலடியில் சீனப்படை ஓட்டம்: உயிர்சேதம் எதுவும் இல்லை ராஜ்நாத்சிங் விளக்கம்
x

எல்லையில் சீனப்படை மீண்டும் ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றதை பதிலடி கொடுத்து இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த சண்டையில் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது.

எல்லையில் பதற்றம்

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனப்படையினர் கொடிய ஆயுதங்களை ஏந்தி வந்து, இந்திய படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய படை வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மோதலின்போது சீனப்படையினர் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலைத் தொடர்ந்து, எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் தொடர்ந்தது. பதற்றத்தைத் தணிப்பதற்கு இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் பலனாக மோதல் புள்ளிகளில் சிலவற்றில் இருந்து இரு தரப்பும் படைளை விலக்கின. இதனால் சற்றே பதற்றம் தணிந்து வந்தது.

மீண்டும் சீனா வாலாட்டல்

இந்த நிலையில் கடந்த9-ந் தேதியன்று அருணாசலபிரதேச மாநிலத்தில்,தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் சீனா மீண்டும் வாலாட்டி அடாவடியில் ஈடுபட்டது. எல்லைக்குள் ஊடுருவி இதுவரை இருந்து வந்த நிலைமையை மாற்ற முயற்சித்தது. ஆனால் இந்திய படைவீரர்கள் சரியான பதிலடி கொடுத்ததால், சீனப்படை ஓட்டம் எடுத்தது. இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு தரப்பு படைத்தலைவர்கள் சந்தித்து பேசினர்.

இந்த தகவல்களை இந்திய ராணுவ வட்டாரங்கள் நேற்று முன்தினம் வெளியிட்டன. இது நாடெங்கும் அதிர் வலைகளை ஏற்படுத்தின.

நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பு

எல்லையில் சீனா வாலாட்டிய விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று எதிரொலித்தது.

மக்களவை வழக்கம்போல நேற்று கூடியதும், 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி நாடாளுமன்ற தாக்குதலை முறியடித்தபோது வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்திய, சீன எல்லை மோதல் விவகாரத்தை மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உறுப்பினர் ஒவைசி உள்ளிட்டோர் எழுப்பினர்.

இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் அளிக்கையில், "இந்த விவகாரத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மதியம் 12 மணிக்கு அறிக்கை அளித்து பேசுவார்" என தெரிவித்தார்.

ஆனால் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, உடனே இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஓங்கிக்குரல் கொடுத்தன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் சபையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையில் பிரச்சினை

இதே பிரச்சினை, மாநிலங்களவையிலும் எதிரொலித்தது.

அங்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த விவகாரத்தை எழுப்பி பேசினார். அப்போது, இந்த விவகாரத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மதியம் 12.30 மணிக்கு அறிக்கை அளித்து பேசுவார் என அவை முன்னவர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஆனால் இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் உடனே விவாதிக்க வலியுறுத்தி, அவையில் அமளியில் ஈடுபட்டதால் சபையை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.

ராணுவ மந்திரி விளக்கம்

பின்னர் மக்களவையும், மாநிலங்களவையும் கூடியபோது, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இரு அவைகளிலும் அடுத்தடுத்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது எல்லையில் தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் கடந்த 9-ந் தேதி நடந்த சம்பவம் பற்றி சபைக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

9-ந் தேதியன்று, தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனப்படையினர் அத்துமீறி, தற்போதைய நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் அதை நமது படை வீரர்கள் மிகுந்த உறுதியுடனும், தீர்க்கமுடனும் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு மோதலில் கைகலப்பு ஏற்பட்டது.

உயிரிழப்பு இல்லை

நமது எல்லைப்பகுதிக்குள் அவர்கள் அத்துமீறி நுழைய முயற்சித்தபோது நமது ராணுவம் துணிச்சலுடன் தடுத்தது. அவர்களை தங்கள் நிலைகளுக்கு திரும்ப வைத்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆனால் நமது தரப்பில் வீரர்கள் உயிரிழப்பு இல்லை; வீரர்கள் யாரும் படுகாயம் அடையவும் இல்லை.

நமது படைத்தலைவர்கள் சரியான நேரத்தில் தலையிட்டதால், சீனப்படையினர் தங்கள் இடங்களுக்கு பின்வாங்கி விட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள நமது படைத்தலைவர் கொடி சந்திப்பு ஒன்றை, சீன தரப்புடன் 11-ந் தேதி நடத்தினார். அதில் இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே நிறுவப்பட்ட வழிமுறைகளின்படி அவர்கள் விவாதித்தனர்.

இத்தகைய செயல்களில் இருந்து சீனப்படையினர் விலகி இருப்பதுடன், எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்குமாறு கூறப்பட்டது. மேலும் இந்த பிரச்சினை, தூதரக வழிகளில் சீன தரப்பிடம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

படைகள் உறுதி

நமது நாட்டின் பகுதிகளைக் காப்பதற்கு நமது படைகள் உறுதி பூண்டுள்ளன என்பதை இந்த சபைக்கு நான் உறுதிபட கூற விரும்புகிறேன். இதில் ஏதேனும் அத்துமீறல் முயற்சிகள் நடந்தால், நமது படையினர் அதை முறியடிப்பார்கள். இந்த துணிச்சலான முயற்சியில், நமது படை வீரர்களை ஆதரிப்பதில் நமதுஒட்டுமொத்த சபையும் ஒன்றிணைந்து நிற்கும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

இதையொட்டி மக்களவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோது, சபாநாயகர் அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

அமித்ஷா திட்டவட்டம்

இதற்கு மத்தியில் உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் இந்த விவகாரம் பற்றி கூறும்போது, "மோடி அரசு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரையில் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாரும் கைப்பற்றி விட முடியாது" என ஆணித்தரமாக கூறினார்.


Next Story