பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த இஸ்லாமிய சகோதரியை 75 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சீக்கிய முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்


பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த இஸ்லாமிய சகோதரியை 75 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த சீக்கிய முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 10 Sept 2022 2:50 PM IST (Updated: 10 Sept 2022 2:52 PM IST)
t-max-icont-min-icon

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது, குடும்பத்தை பிரிந்த அமர்ஜித் சிங் 75 ஆண்டுகளுக்கு பிறகு தனது சகோதரியை சந்தித்தார்.

இஸ்லாமாபாத்,

இந்தியா சுதந்திரம் அடையும் போது தன் குடும்பத்தை பிரிந்த ஒரு சிறுவன், இப்போது கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு பின், பிரிந்த சகோதரியை முதுமை காலத்தில் சந்தித்துள்ளார்.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது, குடும்பத்தை பிரிந்த அமர்ஜித் சிங் என்பவர், 75 ஆண்டுகளுக்கு பிறகு தனது சகோதரியை சந்தித்தார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சார்ந்த அமர்ஜித் சிங் என்பவர் 75 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது தனது குடும்பத்தை விட்டு பிரிந்தார். பிரிவினையின் போது அவரது பெற்றோர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். இஸ்லாமிய மதத்தை சார்ந்த அவரது பெற்றோர் 1947 இல் தங்கள் இரு குழந்தைகளை ஜலந்தரில் விட்டுவிட்டு, ஜலந்தரில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.

பின்னர் சிங் மற்றும் அவரது சகோதரியை ஒரு சீக்கிய குடும்பம் தத்தெடுத்து வளர்த்தது.இஸ்லாமிய மதத்தை சார்ந்த அவர்கள் இருவரும் சீக்கிய மதத்துக்கு மாறினர்.

இந்நிலையில், சிங்கின் பெற்றோருக்கு பாகிஸ்தானில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் தான் சிங்கின் இளைய சகோதரி குல்சூம். குல்சூம் பாகிஸ்தானில் பிறந்தாலும், தனது சகோதரன் மற்றும் சகோதரியைப் பற்றி தாயிடமிருந்து கேள்விப்பட்டார். காணாமல் போன குழந்தைகளை நினைவு கூரும் போதெல்லாம் குல்சூம் அம்மா அழுது கொண்டிருந்தார். குல்சூம் தன் சகோதரனையும் சகோதரியையும் சந்திக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தந்தை நண்பர் சர்தார் தாரா சிங் என்பவர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்து அவரை சந்தித்தார். அப்போது சர்தார் தாரா சிங்கிடம், குல்சூமின் தாய் இந்தியாவில் விட்டுச் சென்ற தனது மகன் மற்றும் மகளைப் பற்றி கூறினார். அவர்களின் கிராமத்தின் பெயரையும் அவர்கள் வீட்டின் இருப்பிடத்தையும் கூறினார்.

அதன்பின், சர்தார் தாரா சிங், படவான் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றார். அவர்களது மகன் உயிருடன் இருப்பதாகவும், ஆனால் அவரது மகள் இறந்துவிட்டதாகவும் சர்தார் தாரா சிங் தெரிவித்தார். சகோதரரின் தகவலைப் பெற்ற பிறகு, குல்சூம் திரு சிங்குடன் வாட்ஸ்அப்பில் சிங்கை தொடர்பு கொண்டார், பின்னர் அவர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர்.

65 வயதான குல்சூம், தனது சொந்த ஊரான பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் இருந்து தனது மகன் ஷாஜாத் அகமது மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் தனது சகோதரனை சந்திக்க சென்றுள்ளார்.பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பில் அவர்கள் சந்தித்தனர். சிங்கைப் பார்த்த பிறகு குல்சூமால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதுகொண்டே இருந்தனர்.

சிங் தனது உண்மையான பெற்றோர் பாகிஸ்தானில் இருப்பதாகவும், அவர்கள் முஸ்லீம்கள் என்பதை முதலில் அறிந்ததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும், தனது சொந்த குடும்பத்தைத் தவிர பல குடும்பங்கள் ஒருவருக்கொருவர் பிரிந்து கிடப்பதை அவர் கூறினார்.சிங் தனது பிரிந்த குடும்பத்தை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார், அப்போது அவர்கள் தங்கள் சீக்கிய குடும்பத்தை சந்திக்க முடியும் என்றார்.

ஷாஜாத் அகமது கூறுகையில், " எனது மாமா சிங் ஒரு சீக்கியர், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார்.


Next Story