அறிவியல் உலகில் இந்தியப் பெண்கள் சல்லடை மூலம் சந்திரனைப் பார்த்து கணவரின் ஆயுளுக்காக வேண்டுகிறார்கள் - ராஜஸ்தான் மந்திரி
அறிவியல் உலகில் இந்தியப் பெண்கள் சல்லடை மூலம் சந்திரனைப் பார்த்து கணவரின் ஆயுளுக்காக வேண்டுவது துரதிர்ஷ்டவசமானது என்று ராஜஸ்தான் மந்திரி கூறியுள்ளார்.
ஜெய்பூர்,
வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்கள் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் உள்ள பெண்கள் இன்னும் சல்லடை மூலம் சந்திரனைப் பார்த்து கர்வா சவுத் அன்று தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வது துரதிர்ஷ்டவசமானது என்று ராஜஸ்தான் மந்திரி கோவிந்த் ராம் மேக்வால் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் மேக்வால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற டிஜிபெஸ்ட் நிறைவு விழாவில் பேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண மந்திரி மேக்வால் "சீனாவிலும் அமெரிக்காவிலும் பெண்கள் அறிவியல் உலகில் வாழ்கிறார்கள். ஆனால் இன்றும் இங்குள்ள பெண்கள் கர்வா சவுத்தில் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக சல்லடை மூலம் பார்க்கிறார்கள். ஆனால் எந்த கணவனும் மனைவியின் நீண்ட ஆயுளுக்காக சல்லடையைப் பார்ப்பதில்லை.
மக்கள் மற்றவர்களை மூடநம்பிக்கைகளுக்குள் தள்ளுகிறார்கள். மதம் மற்றும் சாதியின் பெயரால் மற்றவர்களுடன் சண்டையிடுகிறார்கள்" என்று கூறினார். முதல் மந்திரி அசோக் கெலாட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த கருத்துக்கு மந்திரியை கடுமையாக சாடிய பாஜக மாநில செய்தி தொடர்பாளரும் எம்எல்ஏவுமான ராம்லால் சர்மா, விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விண்வெளிக்கு சென்றுள்ளார் என்பதையும், பல இந்திய பெண்கள் விமானிகளாக பணியாற்றுவதையும் மேக்வால் அறிந்து கொள்ள வேண்டும். நாட்டின் கோடிக்கணக்கான பெண்களை அவர் அவமதித்துள்ளார்.
இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னுடைய கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும். மேக்வால் மீது முதல் மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். மேலும் இந்தியப் பெண்கள் பாரம்பரியங்களைப் பின்பற்றுவதில் பெயர் பெற்றவர்கள் என்றும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் இடையேயான சமநிலையை காத்துக்கொள்ள அவர்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த மேக்வால், தான் அறிவியல் மனப்பான்மை மற்றும் கல்வியை மட்டுமே ஊக்குவிப்பதாக கூறினார். மேலும் நான் கர்வா சவுத்துக்கு எதிரானவன் அல்ல. அதை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். நான் விஞ்ஞான மனோபாவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினேன் என்றும் கூறினார்.