இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2 வாரங்களுக்கு பின் மீண்டும் சரிவு - ரிசர்வ் வங்கி தகவல்


இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2 வாரங்களுக்கு பின் மீண்டும் சரிவு - ரிசர்வ் வங்கி தகவல்
x

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 2 வாரங்கள் அதிகரித்து வந்த நிலையில், இப்போது சரிய தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 30.60 கோடி டாலர்கள் குறைந்து, 60 ஆயிரத்து 100 கோடி டாலராக சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் வங்கி வாராந்திர அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 2 வாரங்கள் அதிகரித்து வந்த நிலையில், இப்போது மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.

மே மாதம் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்,அந்நியச் செலாவணி கையிருப்பு 385.40 கோடி டாலர்கள் உயர்ந்தது. அதற்கு முந்தைய வாரம், 423 கோடி டாலர்கள் உயர்ந்தது.

ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததற்கு முக்கியக் காரணம் வெளிநாட்டுக் கரன்ஸி சொத்து மதிப்பு(எப்சிஏ) குறைந்ததுதான். அதுமட்டுமல்லாமல் தங்கம் இருப்பும் குறைந்துள்ளது.

தங்கம் கையிருப்பு 7.40 கோடி டாலர்கள் குறைந்து, 4084.3 கோடி டாலராகச் சரிந்துள்ளது. தங்கம் கையிருப்பு தொடர்ந்து 2 வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில், இப்போது சரிய தொடங்கியுள்ளது.

அதேபோல, சர்வதேச நிதியத்தில் இந்தியாவுக்கான சிறப்பு வரைவு உரிமையும் 2.80 கோடி டாலர் குறைந்து, 1841 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

எனினும், சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு நிலை, 50 லட்சம் டாலர்கள் அதிகரித்து 502.50 கோடி டாலர்கள் ஆக உள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story