டெல்லியிலும் நுழைந்தது குரங்கு அம்மை: மணாலி சென்று வந்தவருக்கு பாதிப்பு
டெல்லியிலும் குரங்கு அம்மை நுழைந்து விட்டது. மணாலி சென்று வந்த ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலும், அதன் அச்சுறுத்தலும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் இப்போது குரங்கு அம்மை புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவில் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா என பரவி இப்போது ஆசியாவிலும் கால் பதித்து வருகிறது. அந்த வகையில் இந்த நோய் இந்தியாவிலும், தாய்லாந்திலும் பரவி உள்ளது.
உலகளவில் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கேரளாவில் 3 பேருக்கு இந்த நோய் பரவி உள்ளது. அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியிலும் குரங்கு அம்மை நுழைந்து அதிர வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்த நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் பாதிக்கப்பட்டுள்ள நபர் 34 வயது ஆண் ஆவார். மேற்கு டெல்லியைச் சேர்ந்த இவர் வெளிநாடு எதுவும் சென்று வரவில்லை. இருப்பினும் இவர் இமாசலபிரதேசத்தில் மணாலியில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வந்துள்ளார்.
அறிகுறிகள் தென்பட்ட உடனேயே 3 நாட்களுக்கு முன்னர் இவர் டெல்லி மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதில், அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இந்த நோய் பாதித்தவர்களின் சுவாச துளிகள் மூலமாகவும், உடல் ரீதியிலான நேரடி தொடர்புகள் மூலமாகவும் அதிக அளவில் பரவுவது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பாக உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தென் கிழக்கு ஆசியாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:-
குரங்கு அம்மை வேகமாக பரவுகிறது. இதுவரை இந்த நோயை காணாத நாடுகளுக்கும் இந்த நோய் பரவுகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது.
இருந்தாலும் ஆண்களுடன் பாலுறவு கொள்ளும் ஆண்கள் மத்தியில் இந்த நோய் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. ஆபத்தில் உள்ள மக்களிடையே கவனம் செலுத்துவதன் மூலம் நோய் பரவலை குறைக்க முடியும்.
உறுப்பு நாடுகள் இந்த நோய் பரவலைத் தடுக்க கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
உலக அளவிலும், பிராந்திய அளவிலும் இந்த நோய் ஆபத்து மிதமாக உள்ளது. ஆனாலும், உலக அளவில் இது மேலும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இன்னும் பலருக்கு இந்த வைரஸ் பற்றி எதுவும் தெரியவில்லை. நாம் உஷாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.