வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.43 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்; விமான கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு
வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.43 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று பெங்களூரு விமான கண்காட்சியை தொடங்கிவைத்து பிரதமர் மோடி கூறினார்.
பெங்களூரு:
விமான கண்காட்சி
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நேற்று சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது. இதனை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-
பெங்களூருவில் இன்று (நேற்று) தொடங்கியுள்ள இந்த விமான கண்காட்சி புதிய இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. நமது புதிய உயரங்கள் புதிய இந்தியாவின் நிஜம் என்பதற்கு இந்த கண்காட்சி சாட்சியமாக திகழ்கிறது. இன்று நமது நாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விமான கண்காட்சி இந்தியாவின் வளர்ந்து வரும் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த கண்காட்சியில் உலகின் சுமார் 100 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்தியா மீது உலக நாடுகளின் நம்பிக்கை எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.
இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இதன் மூலம் இந்த விமான கண்காட்சி இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. இந்திய சிறு, குறுதொழில் நிறுவனங்கள், உள்நாட்டு புத்தொழில் நிறுவனங்கள், மற்றும் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன. அதாவது, இந்த 'ஏரோ-இந்தியா'வின் முக்கிய கருப்பொருள் என்னவெனில் 'ஒரு பில்லியன் (100 கோடி) வாய்ப்புகளுக்கான ஓடுபாதை' என்பது எல்லா இடங்களிலும் தெரிகிறது. இந்தியா ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும்' என்று நான் விரும்புகிறேன். நமது இந்த பலம் இப்படியே வளர வேண்டும்.
ராணுவ மந்திரிகள் மாநாடு
இந்த விமான கண்காட்சியில் ராணுவ மந்திரிகள் மாநாடு மற்றும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் வட்ட மேசை மாநாடு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி
களின் பங்கேற்பு, உலகின் பல்வேறு நாடுகளின் பங்கேற்பு போன்றவை இந்தியாவின் உலகளாவிய திறனை அதிகரிக்க உதவும். நட்பு நாடுகளுடன் இந்தியாவின் நம்பகமான நல்லுறவை முன்னெடுத்து செல்வதற்கான ஒரு ஊடகமாகவும் இந்த தளம் மாறும்.
இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப உலகில் நிபுணத்துவம் பெற்ற கர்நாடக மாநிலத்தில் இந்த விமான கண்காட்சி நடைபெறுவது விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இது கர்நாடக இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். கர்நாடக இளைஞர்கள், தொழில்நுட்பத் துறையில் உங்களுக்கு என்ன நிபுணத்துவம் இருந்தாலும், அதை பாதுகாப்பு துறையில் பயன்படுத்தி நாட்டின் பலமாக மாற்றுங்கள். இந்த வாய்ப்புகளுடன் நீங்கள் மேலும் இணைந்தால், பாதுகாப்பு துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழி திறக்கும்.
நம்பகமான பங்காளி
ஒரு நாடு புதிய சிந்தனையுடன், புதிய அணுகுமுறையுடன் முன்னேறும் போது, அதன் அமைப்புகளும் புதிய சிந்தனைக்கு ஏற்ப மாறத் தொடங்கும். இந்த விமான கண்காட்சி நிகழ்வு இன்றைய புதிய இந்தியாவின் புதிய அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது. முன்பு இந்த விமான கண்காட்சி ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே கருதப்பட்டது. அது 'இந்தியாவுக்கு விற்பனை செய்யுங்கள்' என்ற கருத்தை தான் வெளிப்படுத்தியது. ஆனால் அந்த எண்ணம் தற்போது மாறிவிட்டது. இந்த விமான கண்காட்சி ஒரு நிகழ்வாக மட்டுமின்றி இது இந்தியாவின் பலமாகவும் மாறியுள்ளது.
இந்தியா இன்று உலகின் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் சந்தை மட்டுமல்ல, இந்தியா இன்று ஒரு சாத்தியமான பாதுகாப்பு துறையில் பங்களிப்பு வழங்கும் முக்கிய பங்குதாரராகவும் திகழ்கிறது. பாதுகாப்பு துறையில் முன்னோக்கிச் செல்லும் நாடுகளுடனும் இந்தியா கூட்டாக செயல்படுகிறது. பாதுகாப்பு தேவைகளுக்கு நம்பகமான பங்காளியை தேடும் நாடுகளுக்கு இந்தியா சிறந்த பங்காளியாக உருவெடுத்து வருகிறது. எங்கள் தொழில்நுட்பம் அந்த நாடுகளுக்கு செலவு குறைந்ததாகவும், நம்பகமானதாகவும் உள்ளது. நீங்கள் இங்கே சிறந்த கண்டுபிடிப்புகளை காணலாம். மேலும் நேர்மையான நோக்கமும் உங்கள் முன்பு உள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம்
நமது வெற்றிகள் இந்தியாவின் திறனை நிரூபிக்கின்றன. இன்று வானத்தில் உறுமும் 'தேஜஸ்' போர் விமானங்கள் 'இந்தியாவில் தயாரிப்போம் ' திட்டத்திற்கு சான்றாக உள்ளன. இன்று, இந்தியப் பெருங்கடலில் தயாராக இருக்கும் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் இந்தியாவில் தயாரிப்போம் திட்ட விரிவாக்கத்திற்கு சாட்சியாக உள்ளது. குஜராத்தின் வதோதராவில் உள்ள சி-2 95 உற்பத்தி நிலையமாக இருந்தாலும் சரி, துமகூருவில் உள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, இவை தற்சார்பு இந்தியாவின் வளர்ந்து வரும் நிலையை காட்டுகிறது. இதில் புதிய விருப்பங்களும், சிறந்த வாய்ப்புகளும் இந்தியாவுக்கும், உலகிற்கும் இடையே இணைக்கப்பட்டுள்ளன.
21-ம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் இழக்காது. தனது கடின உழைப்பில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது. சீர்த்திருத்த பாதையில் ஒவ்வொரு துறையிலும் புரட்சியைக் கொண்டு வந்து கொண்ருக்கிறோம். பல 10 ஆண்டுகளாக மிகப்பெரிய ராணுவ தளவாடங்கள் இறக்குமதி நாடாக இருந்த இந்தியா, இப்போது உலகின் 75 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் 150 கோடி அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.13 ஆயிரம் கோடி) மேல் ஏற்றுமதி செய்துள்ளோம்.
தொழில் முதலீட்டாளர்கள்
ராணுவ தளவாட தொழில்நுட்பம், சந்தை, வணிகம் சிக்கலானது என்பது உங்களுக்கு தெரியும். இருந்தாலும், கடந்த 89 ஆண்டுகளில் இந்தியா தனது ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரித்து வந்துள்ளது. எனவே, இது ஒரு தொடக்கமாக மட்டுமே கருதுகிறோம். வருகிற 2024-25-ம் ஆண்டுக்குள் ராணுவ தளவாட ஏற்றுமதியை 150 கோடி அமெரிக்க டாலரில் (ரூ.13 ஆயிரம் கோடி) இருந்து 500 கோடி டாலராக (ரூ.43 ஆயிரம் கோடி) அதிகரிப்பதே எங்களின் இலக்கு.
இந்தியா உலகின் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இணைய வேகமாக நகரும். மேலும் நமது தனியார் துறையும், தொழில் முதலீட்டாளர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க போகிறார்கள். இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் முடிந்தவரை தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும். தனியார் நிறுவனத்தினர் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது.
வரிச்சலுகைகள்
அம்ரித் காலத்தில் இந்தியா ஒரு போர் விமானி போல் முன்னேறி வருகிறது. இன்றைய இந்தியா வேகமாகச் சிந்தித்து, தொலைநோக்குடன் சிந்தித்து, விரைவான முடிவுகளை எடுக்கிறது. இன்று, இந்தியாவில் இருக்கும் தீர்க்கமான, உறுதியான அரசு, நிரந்தர கொள்கைகள், கொள்கைகளில் தெளிவான எண்ணம் போன்றவை முன் எப்போதும் இல்லாதது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த நல்ல ஏற்ற சூழலை ஒவ்வொரு தொழில் முதலீட்டாளரும் முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நோக்கத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது.
இந்தியாவில் பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. இப்போது பல துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தானியங்கி நடைமுறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கும் செயல்முறையை எளிதாக்கியுள்ளோம். 10-12 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இந்திய பட்ஜெட்டில், உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இதனால் பயனடையும்.
முன்னேற வேண்டும்
தேவை, திறன் மற்றும் அனுபவம் உள்ள இடத்தில், தொழில்துறை நாளுக்கு நாள் வளரும் என்று இயற்கை நியதி கூறுகிறது. இந்தியாவில் பாதுகாப்பு துறையை வலுப்படுத்தும் பணிகள் இன்னும் வேகமாக மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்த திசையில் நாம் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். சீர்திருத்தம், செயல்பாடு, வளர்ச்சி ஆகிய மூன்று மந்திரங்களை இந்த கண்காட்சி எதிரொலிக்கிறது. புதிய இந்தியாவை பெங்களூரு வானம் இன்று பார்த்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு மோடி பேசினார்.