சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தொழில் புரட்சி ஏற்படும்
சாம்ராஜ்நகர் மாவட்டம் தொழில் புரட்சி ஏற்படும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கொள்ளேகால்:-
வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சாம்ராஜ்நகருக்கு வந்தார். சாம்ராஜ்நகர் டவுன் அம்பேத்கர் மைதானத்தில் நடந்த விழாவில் ரூ.1,100 கோடிக்கான வளர்ச்சி திட்ட பணிகளை முதல்-மந்தரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
தொழில் புரட்சி
எங்கள் அரசு விமர்சனங்களை கண்டு கவலைப்படுவதில்லை. உண்மை மற்றும் மனசாட்சியின்படி ஆட்சியை நடத்தி வருகிறோம். மக்களின் கோரிக்கைகளை எங்கள் அரசு நிறைவேற்றி வருகிறது. சாம்ராஜ்நகருக்கு வந்தால் பதவி பறிபோகும் என்று சொல்கிறார்கள். இங்கு வந்தால் பதவி பறிபோகாது. புண்ணியம் கிடைக்கும். பின்வரும் நாட்களில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தொழில் புரட்சி ஏற்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முன்பு ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால், அடுத்த தேர்தலில் வேறு கட்சி ஆட்சிக்கு வரும். இதனால் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் மாறியதே தவிர, மக்களின் நிலை மாறவில்லை. ஆனால் தற்போது நாங்கள் நல்ல மக்கள் பணிகளை செய்து வருகிறோம். பா.ஜனதா அரசின் சாதனைகளை கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்போம். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியது பா.ஜனதா அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.
ஏரிகள் நிரப்பப்படும்
எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் சட்ட சிக்கல் உள்ளது என்கிறார்கள். அரசியலமைப்பின்படி மக்களுக்கு வேண்டியதை வழங்கியே தீர வேண்டும். மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து யார் பேச்சையும் கேட்காமல் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தினேன்.
மக்களின் வளர்ச்சிக்காக தான் அரசு உள்ளது. அரசு செல்வந்தராக இருந்து பயனில்லை. மக்கள் தான் பணக்காரர்களாக இருக்க வேண்டும்.
அரசு பிரபலமாக இருப்பது முக்கியமல்ல. மக்கள் நல்ல வளமுடன் இருக்க வேண்டும். நான் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தபோது சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் முதல்கட்டாக ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப நடவடிக்கை எடுப்போம். விவசாயிகளை தன்னிறைவு பெற செய்வோம்.
சாமி தரிசனம்
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் குடிநீர், சாலை வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். இன்னும் ஒரு வாரத்தில் இதற்காக டெண்டர் விடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அங்கிருந்து மலை மாதேஸ்வரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு நாகமலை அரங்கில் நடந்த கோவில் வளர்ச்சி அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவருடன் மந்திரிகள் சோமண்ணா, அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர்.