ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கர்நாடகத்தின் கலாசாரம், சுற்றுலா தலங்கள் குறித்து விவரிப்பு
ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கர்நாடகத்தின் கலாசாரம், சுற்றுலா தலங்கள் குறித்து விவரிக்கப்பட்டது.
பெங்களூரு:-
வெளிநாடுகளின் பிரதிநிதிகள்
ஜி20 நாடுகள் சபையின் மின்சார வினியோக குழுவின் முதல் கூட்டம் கடந்த 5-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாடுகளின் பிரதிநிதிகளுக்கு கர்நாடகத்தின் கலாசாரம், சுற்றுலா தலங்கள், இயற்கை சூழல்கள், தொழில்வளம் மற்றும் நிறுவனங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதுகுறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜி20 நாடுகளின் மின்சார வினியோக கூட்டம் பெங்களூருவில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெளிநாடுகளின் பிரதிநிதிகள் எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அந்த நிறுவனத்தின் பசுமை நடவடிக்கைகளை பார்த்தனர்.
சூரியசக்தி பூங்கா
அங்கு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் மின் மீட்டர்கள், சூரியசக்தி பூங்கா, மரங்கள் உள்ளிட்டவை பற்றி எடுத்துக்கூறினோம். அதைத்தொடர்ந்து துமகூருவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சூரியசக்தி பூங்காவுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அந்த பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறித்து எடுத்து கூறினோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கபில்மோகன் கூறுகையில், 'வெளிநாட்டு பிரதிநிதிகள் கர்நாடகத்திற்கு வரும்போது, நமது ஆழமான கலாசாரம், இயற்கை சூழல்கள் குறித்து எடுத்து கூறுகிறோம். இங்குள்ள தொழில் முதலீட்டிற்கான வாய்ப்புகளை தெரிவிக்கிறோம். மேலும் அவர்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வளர்ச்சி குறித்தும் விவரித்தோம்' என்றார்.
ராம்பிரசாத் மனோகர்
சுற்றுலாத்துறையின் இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் கூறும்போது, 'உலக அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் கர்நாடகத்தில் உள்ளன. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பண்பாட்டு தலங்களும், வன சூழல்கள், இயற்கை அழகுகள், அழகான கடற்கரைகள் உள்ளன. இவைகள் குறித்து அவர்களுக்கு எடுத்து கூறியுள்ளோம். கர்நாடகத்தின் சுற்றுலா தலங்கள் குறித்து விவரங்களையும் அவர்களுக்கு விளக்கினோம். அவர்களுக்கு நாங்கள் மிக உயரிய உபசரிப்பு அளித்தோம்' என்றார்.