சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் கடும் அமளி: பெங்களூரு ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை


சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் கடும் அமளி:  பெங்களூரு ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை
x

பெங்களூருவில் ஏரிகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் ஏரிகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

மழை-வெள்ள சேதங்கள்

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மந்திரியாக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் வழக்கமான விடுறைக்கு பிறகு சட்டசபை நேற்று மீண்டும் பெங்களூரு விதான சவுதாவில் கூடியது.

கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு சபையில் மழை வெள்ள சேதங்கள் குறித்த விவாதத்திற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளித்தார். அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் கே.ஜே.ஜார்ஜ் குறுக்கிட்டு, 'நான் மந்திரியாக இருந்தபோது ஏரிகளை மூடியதாக பா.ஜனதாவினர் சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்றார். அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

அடிப்படை குணம்

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு அப்போது இருந்த ஆட்சியில் அடிப்படை குணத்தை இழந்த ஏரிகளை மூடிவிடலாம் என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த முடிவை அரசு வாபஸ் பெற்றது. அரசை குறை கூற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இதை சொல்லவில்லை. அதிகாரிகள் சில காரணங்களை கூறி கோப்புகளை அனுப்புவார்கள். ஆனால் அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்க வேண்டும். அங்கு தான் அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டாலும், ஏரிகளை மூட வேண்டும் என்பது தான் அந்த முடிவின் நோக்கம். இது அபாயகரமானது. அதனால் பெங்களூருவில் ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. யாருடைய ஆட்சியில் யார்-யார் ஏரிகளை ஆக்கிரமித்தனர் என்பது பற்றி விரிவாக விசாரணை நடத்தப்படும். ஏரி நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதி கொடுத்தவர்கள் யார் என்பதும் விசாரணையில் தெரிந்துவிடும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

பாழாக்கி விடக்கூடாது

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, 'பெங்களூருவில் ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்தும் முடிவை நான் வரவேற்கிறேன். விசாரணை நடத்துவது நல்லது தான். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இனி வரும் நாட்களில் ஏரிகள் ஆக்கிரமிப்பு நடக்க கூடாது. நாம் அனைவரும் சேர்ந்து பெங்களூருவை காப்பாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் பெங்களூருவை பாழாக்கி விடக்கூடாது' என்றார்.

அந்த நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கே.ஜே.ஜார்ஜ் அடிக்கடி குறுக்கிட்டு பேசினார். அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 'நீங்கள் ஏன் அடிக்கடி எழுந்து குறுக்கிட்டு ஏரிகள் ஆக்கிரமிப்பு பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்று நான் கூறவில்லை. தவறு செய்யாதபோது நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்' என்றார்.

மந்திரிசபையின் முடிவு

மேலும் அவர் பேசும்போது, ஏரிகளை மூடும் நோக்கம் முந்தைய அரசுக்கு இருந்துள்ளது என்பதை மந்திரிசபையின் முடிவு காட்டுவதாக குற்றம்சாட்டினார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து குரலை உயர்த்தி பேசினர். பெங்களூருவில் வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதற்கு பா.ஜனதா அரசே காரணம் என்று குற்றம்சாட்டினர். இரு தரப்பினரும் கூச்சலிட்டதால் சபையில் கடும் அமளி உண்டானது. இதையடுத்து சபாநாயகர் காகேரி, சபையை உணவு இடைவேளைக்காக மதியம் 3 மணிக்கு ஒத்திவைத்தார்.


Next Story