கர்நாடகத்தில் தொடர் கனமழையால் 8 மாவட்டங்களில் பாதிப்பு: நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு பசவராஜ்பொம்மை உத்தரவு


கர்நாடகத்தில் தொடர் கனமழையால் 8 மாவட்டங்களில் பாதிப்பு:  நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு பசவராஜ்பொம்மை உத்தரவு
x

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களில் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு: தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களில் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரம்

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் இருந்து வந்தது.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதாவது, மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் வடகர்நாடகத்தில் உள்ள யாதகிரி ஆகிய 8 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அந்த மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

காவிரியில் வெள்ளம்

குடகு மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடகு மாவட்டத்தில் தொடர் கனமழையால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை மடிகேரி-மங்களூரு சாலையில் மேடநாடு அருகே கரபேஜ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிக்கமகளூருவிலும் கனமழையால் ஹேமாவதி, துங்கா, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹெப்பாலே பகுதி பத்ரா ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடிகெரே அருகே காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி. மோட்டம்மாவின் சகோதரர் அனந்து தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் சென்றபோது, மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

கடலோர மாவட்டங்கள்

கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குமாரதாரா, நேத்ராவதி, சவுபர்ணிகா உள்ளிட்ட ஆறுகளில் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் ஓடுகிறது. மூடபித்ரி தாலுகா முல்கி பகுதியில் தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 கார்கள் சேதம் அடைந்துள்ளன. உல்லால் அருகே உச்சிலா, பட்ரப்பாடி பகுதிகளில் அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கடல் அரிப்பால் அந்தப்பகுதியில் உள்ள சாலை காணாமல் போய் உள்ளது. மங்களூருவில் இருந்து சோலாப்பூர் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல், உடுப்பி மாவட்டத்தில் தொடர் கனமழைக்கு 29 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அதாவது, உடுப்பியில் 5 வீடுகள், குந்தாப்புராவில் 13 வீடுகள், பிரம்மாவரில் 7 வீடுகள், காபு, பைந்தூர் தாலுகாவில் தலா 2 வீடுகள் இடிந்து விழுந்தன. ஹெப்ரி தாலுகாவில் நெல் வயலுக்குள் தண்ணீர் புகுந்தது. குந்தாப்புராவில் மரம் சாய்ந்து விழுந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

உத்தரகன்னடா மாவட்டத்தில் கார்வார், பட்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. அங்கு நிலச்சரிவு, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9-ந்தேதி வரை கனமழை

இதேபோல், சிவமொக்கா, ஹாசன், யாதகிரி ஆகிய மாவட்டங்களிலும் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு வீடுகள் இடிந்தும், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் விளைநிலங்களுக்கும் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகின. கர்நாடகத்தில் தொடர் கனமழைக்கு குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, யாதகிரி ஆகிய 8 மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப்பகுதி மக்கள் நிலச்சரிவாலும் வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 8 மாவட்டங்களிலும் வருகிற 9-ந்தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடுமுறை

தொடர் கனமழை காரணமாக தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, குடகு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சிக்கமகளூரு மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குடகு, தட்சிண கன்னடா மாவட்டங்களிலும் இன்றும் (வியாழக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர்களுடன் ஆலோசனை

இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. பிற கட்டிடங்களும் மழையால் சேதம் அடைந்துள்ளது. மழை பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.

நிவாரணம், மீட்பு பணிகளை...

மழை பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளையும், மீட்பு பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ளும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு்ள்ளேன். மழை நிவாரண பணிகளை வேகமாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன். மழை நிவாரணை பணிகளை மேற்கொள்ளும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எஸ்.டி.ஆர்.எப் மற்றும் என்.டி.ஆர்.எப். படைகளின் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி உள்ளேன். அதன்படி, மழை பாதித்த மாவட்டங்களில் மீட்பு பணிகளும், நிவாரணம் வழங்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வித பிரச்சினையும் இன்றி நிவாரணம் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனி குழு அமைப்பு

தொடர் கனமழையால் மாநிலத்தில் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நின்ற பிறகு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும். நகரங்களில் இருப்பவர்கள் மழை நிற்கும் வரை கிராமங்களுக்கு செல்ல வேண்டாம். மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் தொடர்பில் உள்ளேன். அவர்களிடம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அடிக்கடி விவரங்களை பெற்று வருகிறேன். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களும், ஆறுகளின் ஓரத்தில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக கலெக்டர்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.10 கோடி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பியில் அதிக மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் மழைநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால்வாய்களை தூர்வாருவதற்கு ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story